PUBLISHED ON : ஜூலை 15, 2025 12:00 AM

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அவர் கூறும்போது, 'கீழடி ஆய்வுகளை ஏற்றுக்கொள்ளாமல் தடுக்கிறது மத்திய பா.ஜ., அரசு. தமிழ் மீது பற்று இருப்பதாக பேசும் பிரதமர் மோடி, திருக்குறள் சொல்கிறார். வணக்கம், நன்றி என சொல்வது எல்லாம், ஹிந்தியில் எழுதி வைத்து படிக்கிறார். இது தான், அவரது தமிழ் பற்று.
'நமக்கு அப்படியல்ல... நாம், இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள்; தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் இனத்தை காக்கவும், மொழியை காக்கவும், மண்ணை காக்கவும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து, தமிழுக்கும், இனத்துக்கும், இந்த மண்ணுக்கும் வரும் ஆபத்து குறித்து, முதல்வர் ஸ்டாலின் விளக்கச் சொல்லியுள்ளார். அந்த பணிகளை செய்து வருகிறோம்...' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இவங்க தேர்தல்ல ஜெயிக்கிறதுக்காக, தமிழகத்துக்கு ஆபத்துன்னு அள்ளி விடுறாங்க பா...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.