PUBLISHED ON : ஜன 17, 2025 12:00 AM

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் ஜூலையில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. 'தமிழில் மந்திரங்கள் கூறி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்' என, பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் மற்றும் நிர்வாகிகள், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கோவில் இணை கமிஷனரிடம் மனு அளித்தனர். அதே கையோடு சுவாமி தரிசனம் செய்ய அவர்கள் சென்றபோது, அங்கிருந்த அர்ச்சகர்கள் வழக்கம் போல சமஸ்கிருதத்தில் மந்திரங்களை ஓதினர்.
'தமிழில் தான் மந்திரங்கள் சொல்ல வேண்டும்' என்று, மணியரசன் மற்றும் நிர்வாகிகள் அடம் பிடிக்க, தங்களுக்கு தெரியாது என அர்ச்சகர்கள் கைவிரித்து விட்டனர். அரை மணி நேர காத்திருப்புக்கு பின், தமிழ் மந்திரங்கள் தெரிந்த அர்ச்சகர்கள் வந்து அர்ச்சனை செய்த பிறகே, அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.
இதை பார்த்த பக்தர் ஒருவர், 'அப்பாடா... ஒரு வழியா தமிழை வாழ வச்சுட்டாங்க...' என, கிண்டல் அடித்தபடியே நகர்ந்தார்.