PUBLISHED ON : ஜன 13, 2025 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சேர்மன் தங்கதனம் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க., துணை சேர்மன் ரவி, அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். கவுன்சிலர்கள் பதவிக்காலம் நிறைவையொட்டி அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது; வளர்ச்சி பணிகள் குறித்து விவாதம் நடக்கவில்லை. மொத்தமாக, 20 நிமிடங்களில் கூட்டம் முடிக்கப்பட்டது.
கடைசி கூட்டம் என்பதால், துணை சேர்மன் ஏற்பாட்டில், அனைவருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கல் வறுவல், முட்டை, பிரட் அல்வா, வெங்காயம், கத்திரிகாய் பச்சடி என, தடபுடலாக விருந்து அளிக்கப்பட்டது. இதற்காக, அலுவலக வளாகத்திலேயே பிரியாணி சமைக்கப்பட்டது. இதற்காக, 2 மணி நேரத்திற்கும் மேலாக கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் காத்து கிடந்தனர்.
இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'இப்படி மாதாமாதம் பிரியாணி போட்டா, இனி, எந்த கவுன்சிலரும் வெளிநடப்பு செஞ்சிட்டு வீட்டுக்கு போக மாட்டாங்க...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.