PUBLISHED ON : பிப் 21, 2024 12:00 AM

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையிலான சட்டசபை மதிப்பீட்டு குழுவினர், திருப்பூர் கலெக்டர் அலுவலக அரங்கில் ஆய்வு கூட்டம் நடத்தினர்.
அதிகாரிகளிடம் அரசு திட்டங்கள், பயன்கள் குறித்த புள்ளி விபரங்கள் கேட்கப்பட்டன. கைவசம் விபரம் இல்லாததால், குழுவினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அதிகாரிகள் பலரும் தடுமாறினர். குழு உறுப்பினர்களோ, ஒருவர் மாற்றி ஒருவர் கேள்வி, துணைக் கேள்வி என, மடக்கி மடக்கி கேட்டு, அதிகாரிகளை திக்குமுக்காட செய்தனர்.
பின் வரிசையில் பதுங்கிய அதிகாரி ஒருவர், 'நம்மள இவ்வளவு துருவி துருவி கேட்குறாங்களே... இவங்க தொகுதியில் நடக்கும் திட்டங்கள் பத்தி புள்ளி விபரமா சொல்வாங்களா...' என, முணுமுணுக்க, அருகில் இருந்த மற்றொரு அதிகாரி, 'சும்மா இருங்க... சத்தம் கேட்டு நம்ம பக்கம் திரும்பிட போறாங்க...' என, அவரை எச்சரித்து அடக்கினார்.

