PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

தர்மபுரி மாவட்டம், வத்தல்மலைக்கு பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், அவரது துறை சார்பில் அங்கு நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது, முதியவர் ஒருவர் மனுவுடன் நிற்க, அதை கட்சி நிர்வாகிகள் வாங்கி படித்தனர். அதில், 'சின்னாங்காடு மற்றும் பெரியூரில் பள்ளிகள் உள்ளன.சிலர் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி வந்து, இங்கு கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதை குடிப்பவர்கள் பள்ளி மாணவியரை அச்சுறுத்தும் வகையில் நடக்கின்றனர். எனவே, வத்தல்மலை ஊரின் ஒதுக்குப்புறத்தில் டாஸ்மாக் கடை திறந்தால், இந்த பிரச்னை இருக்காது' என கூறியிருந்தார்.
இதைப் படித்த கட்சி நிர்வாகிகள், 'பிளாக்கில் சரக்கு வாங்க கூடுதல் காசும் செல வழிக்க வேணாம்; ஊருக்கும் டாஸ்மாக் கடை வந்த மாதிரி ஆச்சுன்னு, ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க பார்க்கிறாரே...' என, முணுமுணுத்தவாறு நடந்தனர்.

