PUBLISHED ON : மே 04, 2025 12:00 AM

ஈரோட்டில், தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி நிகழ்ச்சியில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்றார். பின், அவரிடம் நிருபர்கள், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் ஆகியோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலரை சந்தித்துள்ளனர். இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?' என கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த முத்துசாமி, 'எனக்கு எப்படி தெரியும்... அவர்கள் இரண்டு பேரிடமும், கேட்டுவிட்டு சொல்கிறேன். அந்த கட்சியை அவர்கள் நன்றாக நடத்தட்டும். அந்த கட்சி நல்லா இருக்கணும் என்பதுதான் எங்கள் எண்ணம்' என்றார்.
இதை கேட்ட தி.மு.க., விசுவாசி ஒருவர், 'அ.தி.மு.க.,வில் இருந்து நம்மகிட்ட வந்து பல வருஷங்கள் ஆனாலும், முத்துசாமிக்கு பழைய பாசம் போகலை பாருங்க...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.