PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

சேலம் மாவட்டம், இடைப்பாடி ஒன்றியம், பக்கநாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில், ஊராட்சி செயலர் மாரியப்பன் பேசும்போது, 'நீங்கள் கொடுத்த மனுக்கள் என்னிடம் வந்துள்ளன. அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர்கள் பதவி ஜன., 5ல் முடிந்து, தனி அலுவலர் நிர்வாகம் செய்து வருகிறார். ஆயினும், நீங்கள் முன்னாள் தலைவர், முன்னாள் கவுன்சிலர்களை பார்த்து உங்கள் குறைகளை சொல்லுங்கள். அவர்கள் என்னிடம் சொன்னால், அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும்' என்றார்.
அப்போது ஒரு பெண், 'இவ்வளவு நாளா தலைவர், கவுன்சிலர்களிடம் மனு கொடுத்தும், ஒண்ணும் நடக்கலையே... பதவியில் இருந்தப்பவே கண்டுக்காதவங்க, இனி நம்மை எப்படி மதிப்பாங்க... அவங்களிடம் போய் சொல்லுங்கன்னா, ஊராட்சி செயலர் எதுக்கு இருக்காரு...?' என முணுமுணுக்க, அருகில் இருந்த பெண்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.