PUBLISHED ON : ஜூன் 02, 2026 12:28 AM

பெரம்பலுாரில் சமீபத்தில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில், நீலகிரி தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'இந்த உலகத்தில் மூன்று மனிதர்கள் பிறக்கின்றனர். ஒன்று, இந்த உலகத்தை திருத்த வேண்டும் என்பதற்காக, இறைவன் மனிதனாக அவதாரம் எடுத்து மீண்டும் கடவுளாக போய்விடுவது.
'இரண்டாவது, மனிதனாக பிறந்து, உயர்ந்த தவத்தால் அல்லது ஒழுக்கத்தால் இறைவனையே எண்ணி வாழ்ந்து, இறைவனோடு இணைந்து விடுவது. இந்த இரண்டு வகையிலும் நம்பிக்கை இருக்கிறதே தவிர, உண்மை இருப்பதாக தெரியவில்லை.
'மூன்றாவது என்னவென்றால், மனிதனாக பிறந்து, மனிதனோடு வாழ்ந்து, சக மனிதனும், சமூகமும் ஒரு அங்குலமாவது உயர்ந்து விட வேண்டும் என்பதற்காக உழைத்தேன் என்பது. அந்த வகையில், மனிதனாக பிறந்து மாமனிதனாக மறையவே நான் ஆசைப்படுகிறேன்' என்றார்.
இதை கேட்ட ஒருவர், 'அரசியல்ல இவர் யார் யாரை உயர்த்தி விட்டிருக்காராம்...?' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
