PUBLISHED ON : ஏப் 11, 2025 12:00 AM

கோவை மாவட்டம், அன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குருக்கிளையம் பாளையத்தில், வீட்டு முறை சமையல் செய்யும் மெஸ்கள் உள்ளன. நீலகிரி செல்லும் சுற்றுலா பயணியர், இந்த மெஸ்களில் சாப்பிட்டு செல்வது வழக்கம்.
சமீபத்தில் நீலகிரி சென்ற மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், ஒரு மெஸ்சுக்கு சாப்பிட வர உள்ளதாக, முதல் நாளே சுகாதார துறையினர், மெஸ் உரிமையாளரிடம் தெரிவித்தனர். அந்த பகுதி, பிளீச்சிங் பவுடர் துாவி துாய்மைப்படுத்தப்பட்டது.
அதிகாலையே மட்டன் வறுவல், குடல், தலைக்கறி, நாட்டுக்கோழி குருமா என பல்வேறு அசைவ உணவுகள் சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்டன. காலை 7:45 மணிக்கு அமைச்சர் வருவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், 7:30 மணி முதல், மெஸ்சுக்குள் சுற்றுலா பயணியரை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. காலை 8:25 மணிக்கு வந்த அமைச்சரின் கார், மெஸ் முன் வேகம் குறைத்து, மீண்டும் வேகமாக புறப்பட்டு சென்று விட்டது.
ஏமாற்றமடைந்த மெஸ் உரிமையாளர், 'அமைச்சர் வர்றார்னு, சாப்பிட வந்தவங்களையும் அதிகாரிகள் விரட்டி விட்டுட்டாங்க... நஷ்டத்தை யாரு தருவா...' என புலம்பியபடியே உள்ளே சென்றார்.

