PUBLISHED ON : நவ 01, 2025 12:00 AM

துாத்துக்குடியில் பெய்த மழையால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. மழைநீரை அகற்றுவதில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியும், தொகுதி எம்.எல்.ஏ.,வும், அவரது சகோதரியுமான அமைச்சர் கீதா ஜீவனும் போட்டி போட்டு தனித்தனியே செயல்பட்டனர்.
கோக்கூர் ஊரணி பகுதிக்கு வந்த கீதா ஜீவன், அப்பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதற்காக, ஒரு கழிவுநீர் தொட்டியை உடைக்க உத்தரவிட்டார். ஊழியர்கள், கழிவுநீர் தொட்டியை உடைக்க துவங்கியதும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'கடந்த முறை, மழைநீரோடு கழிவுநீர் கலந்தது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமியிடம் முறையிட்டதால், மாநகராட்சி மூலம் அடைத்து வைக்கப்பட்டுள்ள இந்த தொட்டியை ஏன் உடைக்கிறீர்கள்?' என, ஒரு பெண் கேள்வி எழுப்பினார். வாக்குவாதம் முற்றியதால், அங்கிருந்து கீதா ஜீவன் நகர்ந்தார்.
இதை பார்த்த ஒருவர், 'தம்பி கட்டிய தொட்டியை இடிக்கிறதுல, அக்காவுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்...?' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.

