PUBLISHED ON : செப் 17, 2026 01:00 AM

திருச்சி தொகுதி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ, சமீபத்தில் புதுக்கோட்டை வந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், 'சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைத்தால், மீனவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்; போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சென்னை நகரத்திற்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய இடையூறாக இருக்கும்.
'தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக திருச்சியை அறிவித்து, அங்கு புதிய தலைமை செயலகத்தை கட்ட வேண்டும். இது குறித்து ஏற்கனவே முதல்வர் விஜயிடம் மனு அளித்து உள்ளேன். திருச்சியில் புதிய தலைமை செயலகம் அமைத்தால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இவர் திருச்சி எம்.பி.,யாக இருப்பதால், அங்க தலைமை செயலகம் கேட்கிறாரே... இவருக்காக, எல்லா தலைவர்களும் திருச்சிக்கு வருவாங்களா...?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
