PUBLISHED ON : நவ 30, 2024 12:00 AM

அ.தி.மு.க., துவங்கி, 53 ஆண்டுகளானதை கொண்டாடும் வகையில், அனைத்து பகுதிகளிலும்கட்சிக் கொடி ஏற்ற அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மதுரை விளாங்குடியில், 53 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்ற போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. கொடியேற்றும் முதல் நாள் வரை மவுனமாக இருந்த போலீசார், கொடியேற்றும் நாளில், 'அனுமதி இல்லை' என மறுத்தனர்.
இதனால், கொதித்து போன முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, போலீஸ் கமிஷனர் லோகநாதன் வரை பேசியும் ஒன்றும் நடக்கவில்லை. வேறு வழியின்றி பழைய கம்பத்தில் கொடி ஏற்றிய ராஜு, உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, 'மதுரை போலீஸ் சரியில்லை. கமிஷனர் ரோந்து வருவதே இல்லை...' என, சரமாரியாக குற்றம் சாட்டினார்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'அடுத்ததா அண்ணன் பொதுக்கூட்டம் போட்டு, போலீசை வறுத்தெடுப்பாரோ...?'என, கேள்வி எழுப்பியபடி நடையை கட்டினார்.
