PUBLISHED ON : பிப் 13, 2024 12:00 AM

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த இலக்கிய கருத்தரங்கில், சிறந்த எழுத்தாளர் விருது பெற்ற கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், 'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா; நான் தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா, என்று பாடினாலே, தமிழகத்தின் முதல்வராகி விடலாம் என, சிலர் நினைக்கின்றனர்.
'வருமான வரி, 5 கோடி ரூபாய் செலுத்தாதவர், தான் கட்சி ஆரம்பித்ததாக, 22 வரியில் ஓர் அறிக்கை வெளியிடுகிறார். அந்த 22 வரியில், 23 எழுத்துப்பிழைகள். கேரள நடிகர் மம்மூட்டியிடம், 'நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை?' என்று கேட்டதற்கு, 'கேரள மக்கள் திரையில் தலைவனை தேட மாட்டார்கள்; தரையில் தான் தேடுவர்' என்றார். தமிழக மக்கள் அப்படி இல்லையே...' என, ஆதங்கப்பட்டார்.பார்வையாளர் ஒருவர், 'அது தெரிந்து தானே, நடிகர்கள் வரிசை கட்டி கட்சி ஆரம்பிக்கிறாங்க... ஆனா, எல்லாரும் எம்.ஜி.ஆர்., ஆகிடுவாங்களா...' என, கேள்வி கேட்டபடி நடந்தார்.