PUBLISHED ON : மார் 23, 2026 12:26 AM

தமிழக அரசை கண்டித்து, கோவையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொண்டர்கள் முழக்கமிட்ட பின், அக்கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் பேச ஆரம்பித்தார்.
அப்போது, 'த.வெ.க., தலைவர் விஜய் இருக்கும் திசை நோக்கி வணங்கி பேச்சை துவக்குகிறேன்' என்று ஆரம்பித்தவர், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமான, கோவை விமான நிலையம் அருகே நடந்த, மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார்.
அவரது பேச்சுக்கு கைத்தட்டலுக்கு பதிலாக, தொண்டர்கள் விசில் ஊதி, ஆரவாரம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்த்த ஒருவர், 'ஜெ., ஆட்சிக் காலத்தில், அமைச்சர்கள் எந்த மேடையில் பேசினாலும், 'அம்மா இருக்கும் திசை நோக்கி வணங்கி, பேச்சை துவங்குகிறேன்'னு தான் சொல்வாங்க... இவரும் அதே மாதிரி பேசுறாரே... இதுக்கு முன்னாடி, அ.தி.மு.க.,வில் இருந்திருப்பாரோ...?' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
