PUBLISHED ON : மார் 04, 2024 12:00 AM

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டிணம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., அப்துல்லா பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'படிப்பு ஒன்று தான் அடிமைத்தனத்தில் இருந்து உங்களை விடுதலை செய்யும். அடுப்படியை மறந்து நீங்கள் எல்லாம் பெரிய அதிகாரிகளாக வர வேண்டும்' என்றார்.
பின், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, 15 மாணவியருக்கு எம்.பி., பரிசு வழங்கினார். பரிசு பொருட்களாக, 'சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ்' ஆகியவை வழங்கப்பட்டன.
தொடர்ந்து பேசிய அப்துல்லா, 'அடுப்படியை நீங்கள் மறக்க வேண்டும் என பேசி விட்டு, சட்டி, பானைகளை உங்களுக்கு வழங்க வேண்டியதாகி விட்டது. என்னை மன்னித்து விடுங்கள். அதற்கு பிராயச்சித்தமாக ஒவ்வொருவருக்கும் தலா, 1,000 ரூபாய் பரிசு தருகிறேன்' எனக்கூறி, பணம் வழங்கினார்.
மாணவியர் சிலர், 'ரொம்ப நல்லவரா இருக்காரே...' என, எம்.பி.,யை புகழ்ந்தபடி சென்றனர்.

