PUBLISHED ON : டிச 24, 2024 12:00 AM

சென்னை திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், ஆண்டுக்கொரு முறை நிகழும் மூலவர் ஆதிபுரீஸ்வரர்கவசம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம் காண, சென்னை மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
முக்கிய பிரமுகர்களுக்கே சிறப்பு வழியில் செல்ல ஏகப்பட்ட கெடுபிடி இருந்த நிலையில், கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சிலர், தங்கள் உறவினர், தெரிந்தவர்கள், கட்சி பிரமுகர்களை, வி.ஐ.பி.,க்கள் வரிசையில் நுழைத்து விட்டனர்.
இதை பார்த்த பக்தர் ஒருவர், 'தனியார் கோவில் விழாக்களின் பாதுகாப்புக்கு போனால் ஏதாச்சும் சில்லரை தேறும்... அறநிலையத் துறை கோவில் பாதுகாப்புக்கு போலீசார் வந்தால், பாக்கெட்டில் உள்ள சில்லரையை, காணிக்கையா தான் செலுத்திட்டு போகணும்... அதான், தங்கள் உறவினர்களுக்கு சிறப்பு தரிசனமாச்சும் கிடைக்கட்டும்னு அனுப்புறாங்க போல...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.