PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவரிடம், மும்மொழி கொள்கை குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறுகையில், 'ஏற்கனவே தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஒன்றை எடுக்கலாம். அது மலையாளம், கன்னடம், இன்னொரு மொழியாக கூட இருக்கலாம். அந்த மொழியின் கலாசாரம், பண்பாட்டை தெரிந்து கொள்ள முடியும். ஆகையால், மூன்றாவது மொழியை தேர்ந்தெடுப்பது அவசியம்.
'இன்றைய நாகரிக காலத்தில், அலைபேசி பயன்படுத்துகிறோம். அலைபேசி இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. 3 வயது குழந்தை கூட உபயோகிக்கிறது. நாளுக்கு நாள் அறிவியல் வளர்ந்து கொண்டே உள்ளது. அதுபோல, மாணவர்களுக்கு கல்வித்தரம் உயர மூன்றாவது மொழி அவசியம்...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'அவரது கட்சி கொள்கையை, அலைபேசியுடன் அழகா, 'லிங்க்' பண்ணிட்டாரே...' எனக் கூற, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.