PUBLISHED ON : ஜூலை 26, 2025 12:00 AM

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னை களில், மத்திய அரசை கண்டித்து, அனைத்து தொழி லாளர் சங்கம் சார்பில் சென்னை, திருவொற்றியூர் சுங்கச் சாவடி சந்திப்பில், சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதில், மா.கம்யூ., கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் ஜெயராமன் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை திருவொற்றியூர் போலீசார் கைது செய்து, நான்கு மாநகர பஸ்களில் ஏற்றிச் சென்றனர்.
நான்கு பஸ்களும் சென்ற பிறகு மீதம், 30 பேர் இருந்தனர். அவர்களை அழைத்துச் செல்ல பஸ் இல்லாமல், போலீசார் தவித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே காலியாக வந்த தனியார் மினி பஸ்சை நிறுத்தி, கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிச் சென்றனர்.
இதை வேடிக்கை பார்த்த ஒருவர், 'அந்த மினி பஸ் இந்த பக்கம் வந்து, இவங்களிடம் மாட்டிக்கிடுச்சே...' என கூற, அருகில் இருந்தவர்கள் சிரித்தபடியே நடந்தனர்.