PUBLISHED ON : ஏப் 18, 2026 12:00 AM

ஏப்ரல் 18:
மஹாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி மாவட்டம், ஷெராவலி கிராமத்தில், பிராமணரான கேசவ் பாபுண்ணா கார்வே - லட்சுமிபாய் தம்பதியின் மகனாக, 1858ல் இதே நாளில் பிறந்தவர், தோண்டோ கேசவ் கார்வே.
இவர், மும்பை எல்பின்ஸ்டன் கல்லுாரியில் பி.ஏ., கணிதம் படித்து, புனே பெர்குசன் கல்லுாரியில் பேராசிரியர் ஆனார். இவரது 14 வயதில், 8 வயதான ராதாபாய் என்ற சிறுமியை, பெரியவர்கள் மணம் முடித்து வைத்தனர். அவர், இரண்டாவது பிரசவத்தின் போது இறந்தார்.
அக்காலத்தில் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு, சிறுவயதிலேயே திருமணம் செய்விப்பது, கணவன் இறந்தால் மொட்டையடித்து வெள்ளை ஆடை அணிவித்து, தனிமைப்படுத்துவது வழக்கமாக இருந்தது. இதை ஏற்காத இவர், கோடுபாய் என்ற விதவையை மறுமணம் செய்ததால், ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டார்.
விதவைகள் மறுமண சங்கத்தையும், அவர்களுக்கு உணவு, உறைவிடத்துடன் கல்வி கற்பிக்க, மகிளா வித்யாலயத்தையும் துவக்கினார். தென்கிழக்கு ஆசியாவின் முதல் பெண்கள் பல்கலையை, மும்பையில் உருவாக்கினார்.
சமூக சேவைகளுக்காக, மத்திய அரசின் பத்ம விபூஷண், பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை பெற்றவர், தன் 104வது வயதில், 1962, நவம்பர் 9ல் மறைந்தார்.
மக்களால், 'மகரிஷி' என அழைக்கப்பட்டவரின் பிறந்த தினம் இன்று!

