PUBLISHED ON : ஆக 27, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு: அ.தி.மு.க.,வினர்
எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டிய காலம். தொண்டர்கள்,
நிர்வாகிகள் கடமை என்று பணியாற்றாமல், கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும்;
அப்போது தான் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைக்க முடியும்.
கதிர் விளைந்திருக்கும் நிலையில் அதை நாம் அறுவடை செய்ய வேண்டும்.
அதெல்லாம்
சரி... அ.தி.மு.க., எனும் சொந்த வயலுக்கு தீ வைக்க சசிகலா,
பன்னீர்செல்வம், தினகரன் என அணிவகுப்பவர்கள் ஏராளமாஇருக்கும் போது, ஓட்டு
அறுவடைக்கு வேட்டா தான் அமையும்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: கடந்த 24 ஆண்டுகளாக, ஒடிசா அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த நவீன் பட்நாயக் சகாப்தத்தை முடித்து வைத்து, ஒடிசாவின் ஆளும் கட்சியாக பா.ஜ., உயர்ந்திருக்கிறது. இதை தங்களுக்கான முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள தவறும் அ.தி.மு.க.,வின் அரசியலும், பிஜூ ஜனதா தளத்தை பின்பற்ற போவதாகவே தெரிகிறது.
தமிழகத்தில் அவ்வளவு ஈஸியா திராவிட கட்சிகளை, 'ஓவர் டேக்' செய்து பா.ஜ., ஆட்சிக்கு வந்துட முடியுமா என்ன?
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வழக்கமான ஒன்று. எங்கள் தலைவர் பிரபாகரன் இருந்தபோது, இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததா என்பதை பார்க்க வேண்டும். வலிமையான இந்திய கடற்படை பாதுகாப்பு பணியில் உள்ளது. சொந்த நாட்டு மீனவர்களை பாதுகாக்காமல் இந்திய கடற்படை என்ன செய்கிறது?
அப்ப, கடற்படையினரை நாட்டை காவல் காப்பதற்கு பதிலா, மீனவர்களை கண்காணிக்கிற வேலையை பார்க்க சொல்றாரா?
அ.தி.மு.க., முன்னாள்அமைச்சர் செம்மலைஅறிக்கை: 'ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்' என்ற சொலவடைக்கு ஏற்ப, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குறித்து, திருவொற்றியூர் திருமண விழாவில் பேசியதை பார்த்தபோது, வைகோ ம.தி.மு.க.,வை துவக்கிய போது, ஸ்டாலின் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் நினைவிற்கு வந்தன. உயர் பொறுப்பில் இருப்போர் பேசும் போது கவனமாக பேச வேண்டும். இல்லையேல், 'பூமராங்' போன்று எதிர்த்து வந்து, அவர்களையே தாக்கும்.
உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல; எல்லாருக்குமே நாவடக்கம் நல்லது தானே!

