PUBLISHED ON : ஜன 12, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: கடந்த
1977ல் இருந்து, 2016 வரை நடந்த சட்டசபை தேர்தல்களில், அ.தி.மு.க.,வால்
ஏழு முறை தோற்கடிக்கப்பட்ட கட்சி தான் தி.மு.க., என்பது அனைவரும்
அறிந்ததே. ஏழாவது முறையாக ஆட்சி அமைப்பது தான் தி.மு.க.,வின் இலக்கு
என்றால், 2026 சட்டசபை தேர்தலில், எட்டாவது முறையாக தி.மு.க.,வை
தோற்கடிப்பது தான் அ.தி.மு.க.,வின் லட்சியமாக இருக்கும்.
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'பெண்களுக்கான அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி, தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது. பெண்கள் உயர்ந்தால் தான், ஒரு சமூகம் உயர்ந்து நிற்க முடியும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். கனிமொழியை தி.மு.க., தலைவராகவும், வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து, பெண்கள் உயர்வுக்கு வழி செய்யப் போகிறாரா?
இவர், இதே கேள்வியை பா.ஜ.,வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவை பார்த்தும் கேட்பாரா?
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்திபேச்சு: பழனிசாமியை எதிர்த்து தேர்தல் கமிஷனில் புகார் அளித்த என்னையும், மற்றவர்களையும் அ.தி.மு.க., உறுப்பினர்கள் இல்லை என, தேர்தல் கமிஷனுக்கு பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். என்னை உறுப்பினர் இல்லை என சொல்வதற்கு, எந்த உரிமையும் அவருக்கு இல்லை. மூத்த உறுப்பினராக பல பொறுப்புகளை ஜெயலலிதா உத்தரவுப்படி வகித்து, செம்மையாக பணியாற்றிய என்னை பார்த்து இப்படி சொல்வது வேடிக்கை.
ஜெ., உத்தரவில் முதல்வரான பன்னீர்செல்வமே அ.தி.மு.க., உறுப்பினர் இல்லைன்னு சொல்லும் போது, இவர் எல்லாம் எம்மாத்திரம்?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி: அண்ணா பல்கலை விவகாரத்தை திசை திருப்ப, கவர்னரை கண்டித்து தி.மு.க., போராட்டம் நடத்துகிறது. அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், 'யார் அந்த சார்?' என்பது தெரியும் வரை பிரச்னை ஓயாது. யார் அந்த சார்? என்பது தெரியும்போது, இந்த ஆட்சியே ஆட்டம் காணும் என்பதால் தான் தி.மு.க., ஆடிப்போய் உள்ளது.
அதான், 'யார் அந்த சார்?'னு ஆரம்பிச்சாலே, முதல்வர் துவங்கி அமைச்சர்கள் வரை, 'டென்ஷன்' ஆகுறாங்களா?