PUBLISHED ON : செப் 13, 2011 12:00 AM

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு பேட்டி : கார்ப்பரேட் நிறுவனங்களால் தான், பெரிய அளவிலான ஊழல் ஏற்படுகிறது. இவற்றை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும்; ஊழலை அடிமட்டத்திலேயே ஒழிக்க வேண்டும்.
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: தமிழகத்தில் அமைதியாக நடக்கும் நிகழ்ச்சிகளில் கூட, பெருங்கூட்டங்கள் கூடுவதை பயன்படுத்தி, சமூக விரோத சக்திகள் கலவரங்களை உருவாக்க முயல்வது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீஸ் துறையைச் சார்ந்தவர்கள் கடும் முயற்சி எடுத்து, அப்படிப்பட்ட சமூக விரோத சக்திகள் மீது தயவு தாட்சண்யம் இன்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ஜ., எம்.பி., வருண் இணையதள பேட்டி: இந்தியா ஏழை நாடு; ஆனால், இந்த நாட்டில் பணக்காரர்கள் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி ஏழைகளுக்காக பாடுபடுவதாக கூறிக் கொள்கிறது. ஆனால், அதன் தலைமை பணத்தையே நம்பி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி, ஏழை மக்களின் பணக்கார கட்சி.
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேச்சு: கள்ளுக்கு விடுதலை கோருவதும், டாஸ்மாக்கிற்கு எதிராக குரல் கொடுப்பதும் ஊழலுக்கு எதிரான போராட்டம் தான். 'கள்'ளுக்கு, தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். இதை நிறைவேற்ற எந்த நிதியும் தேவையில்லை.
மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி பேட்டி: காங்கிரஸ் கட்சியின் கைப்பொம்மையாக சி.பி.ஐ., செயல்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். காங்கிரசின் கைப்பொம்மையாக சி.பி.ஐ., செயல்பட்டால், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் சி.பி.ஐ., கைது செய்தது ஏன்? சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கள் கடமையை செய்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா பேச்சு: இடதுசாரி ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்ததாக மம்தா பானர்ஜி புகார் கூறினார். இப்போது, அவரின் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டது. திரிணமுல் காங்கிரசின் வன்முறைக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, அதன் கூட்டணி கட்சியான, காங்கிரசும் தப்பவில்லை.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலு பேச்சு: மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும் உள்ளாட்சித் தேர்தலில் விண்ணப்பிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, 'நான் இத்தனை ஆண்டுகளாக கட்சிக்காகப் பாடுபடுகிறேன், அதனால், எனக்கு வாய்ப்பு கொடுங்கள்' என்றோ, 'நானும் என் தந்தையும் தி.மு.க.,விற்காக சிறைக்குச் சென்றவர்கள்' என்று சொல்லி யாரும் சீட் கேட்க வேண்டாம்.