PUBLISHED ON : செப் 18, 2011 12:00 AM

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு: கடந்த 12 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களைச் சந்தித்திருக்கிறேன்.
அவர்களின் உணர்வுகளை, கனவுகளை அறிந்து, புரிந்து வைத்துள்ளேன். பல இடங்களில், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, இளைஞர்கள் பலரும், தன்னம்பிக்கையுடன் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.
பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேட்டி: மத்திய - மாநில அரசு உறவுகளுக்கு பலவிதத்தில் சோதனை ஏற்பட்டாலும், அரசியல் சட்டம் நன்றாக இருப்பதால், உறவுகள் பாதுகாக்கப்படுகிறது. அரசியல் அமைப்பின் படி திட்டக்குழு மூலம் தான் வருவாய் பகிர்ந்து கொள்வது பற்றி முடிவு செய்யப்படுகிறது. ஆனால், காலப்போக்கில் திட்டக்குழு அதற்கான உறுதியை இழந்து விட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு: மும்பையில் கடந்த ஜூலையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு, டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உள் துறையின் கவனக்குறைவிற்கு நான் பொறுப்பேற்கிறேன். இந்த சம்பவங்கள் உள்துறை அமைச்சகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இ.கம்யூ., தேசிய செயலர் ராஜா பேச்சு: மேலை நாடுகள் உயர் கல்வியை இலவசமாக கொடுத்து வருகின்றன. அதே போன்று இந்தியாவிலும் இலவச உயர்கல்வி வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால், நம் நாட்டு மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் போது, ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் அன்னிய செலாவணியாக போகும் பணம் மிச்சமாகும்.
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: விலைவாசி உயர்வு விஷம் போல் ஏறி, நாட்டு மக்களை கசக்கி பிழியும் நிலையில், பெட்ரோல் விலையை உயர்த்தி இருப்பது, நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடைபெறும்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சேதுராமன் அறிக்கை: வளர்ந்து விட்ட நாடுகளான ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் மிகப் பெரிய அளவில் அணு மின்சாரத்தை உபயோகப் படுத்துகின்றன. உலகிலேயே, குறைந்த செலவில் கிடைக்கும் சக்தி, சூரிய சக்தி; அடுத்தது அணு சக்தி. ஐந்து அடுக்கு பாதுகாப்பு கொண்ட, அணு உலைகள் சாலைப் பயணம், ரயில் பயணத்தை விட பாதுகாப்பானது. நவீன மாறுதலுக்கேற்ப, கூடங்குளம் மின் உற்பத்தி துவங்க கூடங்குளம் பகுதி மக்கள் ஒத்துழைப்பு தந்தால், தமிழகம் மின் பற்றாக்குறையிலிருந்து மீள்வதற்கு, வழி பிறக்கும்.
மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி பேச்சு: இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு புதிய கம்பெனிகள் சட்டத்தை அடுத்த ஆண்டில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல், விரைவில் பெறப்படும். நாட்டில் கம்பெனிகள் நிர்வாகம் வெளிப்படையாக அமைவதையும், ஜனநாயகத்தின் முக்கிய பங்களிப்பாக நிறுவனங்கள் செயல்படுவதையும் புதிய கம்பெனிகள் சட்டம் உறுதி செய்யும்.
பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு: வரும், 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். அப்போது, பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இடம் பெறும்.
அண்ணா பல்கலைக் கழக சிவில் துறை முதல்வர் சேகர் பேச்சு: நாட்டில், 1 லட்சத்து, 80 ஆயிரம் மக்கள், பொறியியல் துறையில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். பொறியியல் துறையில் இருக்கும் நாம் வளர, துறை சார்ந்த விஷயங்களோடு நம்மை ஒருமுகப்படுத்தி கொள்ள வேண்டும். பொறியியல் துறையில் வளர நம்மை தயார் படுத்தி கொண்டு, நவீன உலகில் போட்டி மனப்பான்மையோடு வாழ வேண்டும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் அறிக்கை: பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு போட்டியாக உள்ள சில நாடுகளில், 6.5 சதவீத வட்டியில் வங்கிக் கடன் எளிதாக கிடைக்கிறது. அந்நாட்டு நிறுவனங்களின் நிதி தேவைகள் பூர்த்தியாகின்றன. சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், ஏற்கனவே பல்வேறு வகையில் சோதனைக்கு ஆளாகியுள்ள ஏற்றுமதியாளர்கள், வட்டி உயர்வால் மென்மேலும் பாதிக்கப்படுவர்.
மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா பேட்டி: பெட்ரோல் விலை உயர்வு மிகவும் நல்ல செய்தி. இதனால், நம் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்கு நம்பகத்தன்மை கிடைக்கும். இந்த விலை உயர்வால், முதலீடு பாதிக்கும் என நான் கருதவில்லை.
பா.ஜ., பொதுச் செயலர் வெங்கையா நாயுடு பேட்டி: பெட்ரோல் விலை உயர்வு, மக்களுக்கு எதிரானது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடும் என்பதால், எண்ணெய் நிறுவனங்களின் பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது. மக்களின் கருத்து களுக்கு மதிப்பளிக்காததால், மக்கள் ஆதரவை காங்கிரஸ் கூட்டணி இழந்து வருகிறது.

