PUBLISHED ON : அக் 01, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., சமூக ஊடக பொறுப்பாளர் அர்ஜுனமூர்த்தி பேச்சு: கரூர் பெருந்துயரம் என்னை ஒரு கடந்தகால சூழலை எண்ணி பார்க்க வைக்கிறது. நடிகர் ரஜினி, கொரோனா தொற்று காலத்தில் மக்களின் பாதுகாப்பு கருதி, தன் அரசியல் பயணத்தை துவக்காமல் விலகினார். கூடும் மக்களின் பாதுகாப்பு முக்கியம். தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டால் அதை தாங்க முடியாது என கூறிய அவரது கருணை மனம், என்னை
பெரிதும் கவர்ந்தது. தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கிறவன் மனிதன்... மத்தவங்களை பற்றியும் சிந்திக்கிறவன் மாமனிதன்... அந்த வகையில், ரஜினி ஒரு மாமனிதர் தான்!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டி: கடந்தாண்டு
10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 47,000 மாணவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
தமிழ் இலக்கியங்கள் ஆன்மிகத்தை போதிப்பதால், பள்ளிகளில் தமிழ் கற்றுத்
தருவதில் தி.மு.க., அரசு ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு தமிழ் பல்கலைக்கழகம்
கூட தி.மு.க., ஆட்சியில் துவக்கப்படவில்லை. தி.மு.க., அரசு, தன்
சுயலாபத்திற்காக, கல்வியில் அரசியல் செய்கிறது.
இப்ப இருக்கிற பல பல்கலைகளே துணைவேந்தர்கள் இல்லாம தள்ளாடிட்டு இருக்கு... இதுல, புதுசா எங்க இருந்து பல்கலையை துவக்குவாங்க?
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு, 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது, 'இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு, 100 சதவீதம் வரி விதிக்கப்படும்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது, இந்திய தொழில் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்க அரசின் பொருளாதார போர் குறித்து விவாதித்து முடிவெடுக்க, பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை மத்திய அரசு உடனே கூட்ட வேண்டும்.
இப்ப தான், இவரிடம் எம்.பி., பதவி இல்லையே... பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை கூட்டினாலும், அங்க இவரால கர்ஜிக்க முடியாதே!
மா.கம்யூ., கட்சி மாநில செயலர் சண்முகம் அறிக்கை: கரூரில் பெரும் கூட்டம் கூடும் நிலையில், அதை முறைப்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சியையும் த.வெ.க., நிர்வாகிகள் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறையும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். நீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகள் கறாராக பின்பற்றப்படுகிறதா என்பதை போலீஸ் துறையும் உறுதி செய்திருக்க வேண்டும்.
'எதிர்க்கட்சி நடத்துற கூட்டம் தானே' என்று மாவட்ட நிர்வாகத்தினரும், போலீசாரும் அலட்சியமா இருந்துட்டாங்களோ?