PUBLISHED ON : ஆக 22, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: பா.ஜ.,வுடன் தி.மு.க., கள்ள உறவு வைத்திருக்கிறது என்பதும் பொய். அதே பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கள்ள உறவு என்பதும் பொய். தி.மு.க.,வுக்கும், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வுக்கும் கள்ள உறவு என்பதே மெய். இதற்கு, குறட்டை விட்டு துாங்கும் கோடநாடு வழக்கே சாட்சி.அப்படியே, இவங்க தலைவர் பன்னீர்செல்வத்துக்கும்,தி.மு.க., தலைமைக்கும் எந்த உறவும் இல்லைன்னு அடித்து சொல்வாரா?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் நாணயம் வெளியிட்டபோது, 'நாங்கள்ஆட்சியில் இருந்தும் பா.ஜ.,வை அழைக்கவில்லை. ஆனால், கருணாநிதிநுாற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு பா.ஜ.,வை அழைத்தது ஏன்?' என, பழனிசாமி கேட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., நாணய வெளியீட்டு விழாவின் போது, தமிழகத்தின் அன்றைய பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.,வை அ.தி.மு.க., அழைத்தது. கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவின் போது, இன்றைய பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.,வை தி.மு.க., அழைத்தது. அவ்வளவு தான்.எப்படியாவது அரசியல் சூழலை மாத்தி, 2026ல் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி ஆகிடணும் என்ற இவங்க ஆசை வெளிப்படுது!
பொள்ளாச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன் பேச்சு: சட்டசபை தேர்தலில்,பழனிசாமியை மக்கள் ஆதரிப்பர். பழனிசாமியின் நான்கரை ஆண்டு ஆட்சியில்,வரிச்சுமை இல்லை; மக்கள் துன்பமின்றி வாழ்ந்தனர். இன்னும் ஒன்றரை ஆண்டு காலம், அதாவது, 18 அமாவாசைக்கு பின், பழனிசாமிதலைமையில் ஆட்சி அமையும்.அ.தி.மு.க., தலைவர்கள் அமாவாசையை எண்ணிட்டு இருக்காங்களே... 2026ல் இவங்களுக்கு பவுர்ணமி வந்துடுமா?
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேட்டி: தி.மு.க., - பா.ஜ., இடையே ரகசிய உறவு இருப்பதாக, பழனிசாமி சொல்லியிருக்கிறார். திருமணம், பிறந்தநாள் விழாவுக்கு சென்றால்,அங்கு நான்கு நல்ல வார்த்தை சொல்வது தமிழர் பண்பாடு. கருணாநிதியின் நுாற்றாண்டு கொண்டாட்டத்தில், அவருக்கு நாணயம் வெளியிட்டு, விழாவுக்கு அமைச்சரை அனுப்பி, அவர் குறித்து நான்கு நல்ல வார்த்தைகள் பேச வைத்தது பா.ஜ.,வின் பண்பாட்டு அடையாளம்.அப்ப, ராஜ்நாத் சிங், கருணாநிதி பற்றி புகழ்ந்து பேசியது, கட்சி மேலிடம் எழுதிக் கொடுத்து அனுப்பியதா?