PUBLISHED ON : மார் 25, 2024 12:00 AM

தமிழக, வேளாண் துறை அமைச்சர்பன்னீர்செல்வம் பேச்சு:
பா.ம.க.,வினர்
கடந்த தேர்தலில், அ.தி.மு.க.,வினருக்கு விருந்து வைத்தனர்; இம்முறை,
பா.ஜ.,வினருக்கு விருந்து வைத்துள்ளனர். ஒவ்வொரு பாட்டாளி தொண்டனின் தலையை
அடமானம் வைத்து, பா.ம.க.,வை நடத்துகின்றனர். நேற்று வேறு கூட்டணி; இன்று,
பா.ஜ., கூட்டணி என, மாறி மாறி கூட்டணி அமைத்து ஏமாற்றுவதை, மக்கள்
மத்தியில் எடுத்து சொல்ல வேண்டும்.
'வடலுாரில் வள்ளலார் மையம்
அமைக்கவா எதிர்ப்பு தெரிவிச்சீங்க; உங்களை கிழிகிழின்னு கிழிக்கிறேன்'னு,
பா.ம.க., பற்றிய இவரின், 'மைண்ட் வாய்ஸ்' கேட்குதே!
கோபி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேட்டி:
அ.தி.மு.க.,வில் திருப்பூர் லோக்சபா தொகுதியை பொறுத்தவரை, அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைத்து உழைத்து, வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணிப்போம். 'திருப்பூர் தொகுதியில் ஓட்டு வித்தியாசம், தமிழகத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது' என்ற வரலாற்றை படைப்போம்.
இப்போதைக்கு இவங்க கட்சி இருக்கிற நிலைமையில, ஓட்டு வித்தியாச வரலாறு, தோல்வி கணக்குல வராம இருந்தால் சரி!
இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேச்சு:
பா.ஜ., கூட்டணியில் இருந்தவரை, அ.தி.மு.க.,வினரை நெருங்காத அமலாக்கத்துறை, கூட்டணியில் இருந்து விலகியவுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்துகிறது. இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கான சதி. காங்கிரஸ் கட்சி வங்கி கணக்கை முடக்கி வைத்திருப்பது, தேர்தலில் அக்கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் முயற்சி. இது, காங்கிரஸ் கட்சியை தடை செய்ததற்கு சமம். நாம் தமிழர் கட்சியினர் கேட்ட சின்னம், காரணம் கூறாமல் மறுக்கப்பட்டது. த.மா.கா.,விற்கு சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கு எதிரான அனைத்து காரியங்களையும், பா.ஜ., அப்பட்டமாக செய்கிறது.
அது மட்டுமா... ஆரம்பத்துல இருந்து, பா.ஜ.,வுக்கு ஆதரவா இருந்த பன்னீருக்கு, சுயேச்சையா போட்டியிடுங்கன்னு, ஒரு தொகுதியை ஒதுக்கி ஓரமா அனுப்பிட்டாங்களே!
தமிழக, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு:
நாம் வெற்றி பெறுவோம் என்ற மமதையில் இருக்க வேண்டாம். அப்புறம், முயல் - ஆமை கதையாகி விடும். கூடினோம், கலைந்தோம் என இருக்காமல், தி.மு.க., அமோக வெற்றி பெற தேர்தல் பணியாற்ற வேண்டும்.
இவர் சொல்றது சரி தான்... இந்த, 'அலெர்ட்' தி.மு.க.,வை விட, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தான் ரொம்ப பொருத்தமா இருக்கும்!

