PUBLISHED ON : ஏப் 06, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,
பொதுச் செயலர் பழனிசாமி பிரதமராக முடியாது. தேசிய கட்சிகளும்,
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவில்லை. தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைய
வேண்டும் என்பது அ.தி.மு.க.., நோக்கம். அப்படி இருக்கும் பட்சத்தில்
பா.ம.க.,வுக்கு அ.தி.மு.க., ஓட்டளிக்க வேண்டும். பா.ம.க.,விற்கு
அ.தி.மு.க.,வினர் ஓட்டு போட்டால் தி.மு.க., தோல்வி அடையும். இது என் அன்பான
வேண்டுகோள்.
நல்ல டீலிங்... அதே மாதிரி உங்களால முதல்வராக
முடியாதுன்னு, சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வினரை இரட்டை இலைக்கு ஓட்டு போட
சொல்லி பழனிசாமியும் கேட்பாரே!
தமிழக காங்கிரஸ் எஸ்.சி., துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார் அறிக்கை: கச்சத்தீவை மீட்போம் என, வாய் கூசாமல் அன்புமணி கூறுகிறார். மத்திய அமைச்சரவையில் இருந்த போது கச்சத்தீவு பற்றி ஒரு முறையாவது பேசியிருப்பாரா? ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் போதாவது கச்சத்தீவை மீட்க கோரிக்கை வைத்திருப்பாரா?
அந்த தீவை தாரை வார்க்கும் போது ஆட்சியில் அமைதியா இருந்துட்டு, இப்ப மீட்போம்னு தி.மு.க., சொல்றதை விடவா அன்புமணி சொல்வது அபாண்டம்?
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: தி.மு.க., வென்ற ஆறு சட்டசபை தேர்தல்களிலும், கூட்டணி பலம், எதிர்க்கட்சிகள் பிளவு, சர்ந்தப்ப சூழ்நிலை காரணமாக வென்றது. உண்மையில் சொந்த பலத்தில் ஒரு போதும் தி.மு.க., அதிகாரத்தை பெற்றதில்லை. 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிரான வெறுப்பை விதைத்து வெற்றி கண்டிருக்கலாம். மக்களை திரும்பவும் ஏமாற்ற முடியாது.
அப்ப, தமிழகத்தில் இம்முறை பா.ஜ.,வுக்கு எம்.பி., கணக்கு துவங்கிடும்னு அடிச்சி சொல்றீங்களா?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கச்சத்தீவு விவகாரத்தில், தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்க, காங்கிரஸ், தி.மு.க.,வினர் மோசடி வேலைகளில் ஈடுபடுகின்றனர். கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு, தற்போது மீட்போம் என தி.மு.க., நாடகம் நடத்துவதை, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களின் முதுகில் குத்திய தி.மு.க., - காங்., மக்களிடம் பொய் சொல்லி ஆதரவு கேட்பது வெட்கக்கேடு.
அதெல்லாம் சரி... இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரம் நடக்கிற நேரத்துல கிளப்பி விட்டதால, பா.ஜ.,வும் இதில் நாடகமாடுதோன்னு மக்கள் பேசுறாங்களே!

