PUBLISHED ON : ஏப் 12, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
குமரியில்
'கை'க்கும், தாமரைக்கும் கனத்த போராட்டம். ராமநாதபுரத்தில் நவாஸ் கனியை
முந்தும் பலாக்கனி. தர்மபுரியில் மருமகளுக்கு மரியாதை. தேனியில் விசில்
அடிக்கும் குக்கர். கோவை, நீலகிரியில் முந்தும் தாமரை. வேலுாரில்
இன்முகத்தில் ஏ.சி.சண்முகம். தலைநகர் சென்னையில் மெல்ல முந்தும் தமிழிசை.
தென்காசியில் பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா. சிவகங்கையில் சீனாதானாவை
அலறவிடும் பிரதமரின் துாதர் யாதவ். வாக்காளர்களின் நாடி பிடித்து
பார்த்ததில் கிடைத்த முதற்கட்ட தகவல்கள். இன்னும் தொடரும்.
வாக்காளர்களின் நாடி இப்ப இப்படி இருக்கலாம்... அவங்க கையில, ஆளுங்கட்சி வைக்கப் போற, 'வெயிட்' எல்லா கணிப்புகளையும் மாத்திடும்!
தி.மு.க., வர்த்தகர் அணி மாநில இணை செயலர் உமரி சங்கர் பேச்சு: இந்த லோக்சபா தேர்தல் வழக்கமான திருவிழாவாக நடக்காமல், தேர்தல் யுத்தமாக மாறியுள்ளது. இந்தியாவை காக்க, முதல்வர் ஸ்டாலின் வருகிறார் என்ற முழக்கம், நாடு முழுதும் 'இண்டியா' கூட்டணி முன்னேறி செல்வதற்கு வழி வகுத்துள்ளது.
'இந்தியாவை காக்க ராகுல் இருக்கார்'னு காங்கிரசார் சொல்றாங்க... இவரோ, ஸ்டாலின் வர்றார்னு சொல்றாரே... காங்கிரசார் இதை ரசிப்பாங்களா?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: திருநெல்வேலி மற்றும் தென்காசி லோக்சபா தொகுதிகளில், கிராமப்புறங்களுக்கு சென்றபோது, பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு பஸ்கள் இல்லை அல்லது குறைவாக உள்ளது எனக் கூறியது, அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
இந்த கொடுமை எல்லாம் பல வருஷமா இருக்கு... இவர் இப்பதான் கிராமப்புறங்களுக்கு போயிருக்கார் என்பது பளிச்சுன்னு தெரியுது!
திருப்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் பேட்டி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான கட்டடம், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அங்குள்ள கட்டடத்தை ஏழை விவசாயிகளுக்காக வாரச்சந்தைக்கு பயன்படுத்திக் கொள்ள ஏன் வாடகைக்கு விடவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஓட்டை படகில் பயணிக்கிறது. திருப்பூரில்ஓட்டை படகு கரை தட்டி விழுந்து விடும். திருப்பூர் தொகுதியும் பா.ஜ., கோட்டையாக மாறி விடும்.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து, சேர்ந்து, கம்யூ.,க்களும் அவங்களை மாதிரியே சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்களோ?

