PUBLISHED ON : ஏப் 13, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு: அ.தி.மு.க., - தி.மு.க.,விடம்
புதிய சிந்தனைகள், திட்டங்கள் இல்லை. அவை காலாவதியான கட்சிகள். இந்த
தேர்தலில் நாங்கள் எடுத்த முடிவு நல்ல முடிவு. வரும் சட்டசபை தேர்தலில்
தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது என்
ஆசை. இது காலத்தின் கட்டாயம். அதற்கு இந்த லோக்சபா தேர்தல் அடித்தளமாக
அமையும்.
எந்த கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்...? பா.ஜ., தலைமையிலா அல்லது பா.ம.க., தலைமையிலா?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஒன்பது ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த வாடி வாசல்களை, பிரதமர் மோடி உதவியோடு சட்ட திருத்தம் என்ற சாவி வைத்து திறந்து, ஜல்லிக்கட்டை மீட்டுக் கொடுத்த அதே மோடிக்காரரும், போடிக்காரரும், கைவிட்டு போன கச்சத்தீவையும் நிச்சயம் மீட்டு கொடுப்பர் என்ற நம்பிக்கை மீனவ சமூகத்திடம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை இருக்கிற பரிதாப நிலைமைக்கு, மோடி மட்டும் மனது வைத்திருந்தால் கச்சத்தீவு எப்பவோ நம்ம கைக்கு வந்திருக்குமே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'யார் அந்த ஜோக்கரா' என, அண்ணாமலையை கிண்டலடிக்கிறார் தயாநிதி மாறன். வில்லன்களின் பார்வையில், நல்லவர்கள் ஜோக்கர்களாக தெரிவதில் வியப்பில்லை. ஜோக்கர்கள் மக்களை மகிழ்விப்பர். ஊரை கொள்ளையடித்த ஊழல் பெருச்சாளிகள் தமிழர்களுக்கு வில்லன்கள் தான். அந்த வில்லன்கள் கூட்டத்தில் மிக முக்கிய வில்லன் தயாநிதிமாறன்.
யார் ஜோக்கர், யார் வில்லன், யார் ஹீரோ என்பது ஜூன் 4ம் தேதி மக்கள் அளிக்கும் தீர்ப்பில் தெரிந்துவிடுமே!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து நிரந்தரமாக காப்பதற்கான ஒரே வழி, இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக தாரை வார்க்கப்பட்ட இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவு, இலங்கையிடம் இருந்து மீட்கப்பட வேண்டும். இதைத்தான் தமிழக மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கச்சத்தீவு மீட்கப்படும் நாள் வெகு துாரத்தில் இல்லை.
கச்சத்தீவுக்கும், இவர் போட்டியிடுற ராமநாதபுரம் தொகுதிக்கும் இடையே துாரம் கம்மி என்பதால் இப்படி ஒரு வாக்குறுதியை அளிக்கிறாரோ!

