PUBLISHED ON : ஏப் 18, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'கோவைக்கான
மிகப்பெரிய தொழில் திட்டத்தை மிரட்டி, குஜராத்துக்கு பா.ஜ., அனுப்பியது'
என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். டாடா நிறுவன ஆலை தமிழகத்திற்கு
கிடைக்காமல் போக காரணமே தி.மு.க., அரசு தான். லஞ்சம், ஊழல், முறைகேடு என
சதா பணம் பறிக்கும் இயந்திரமான திராவிட மாடலை விட, வளர்ச்சி மாடலான
குஜராத்தை டாடா நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. இதை உணர்ந்து தன் அரசின்
செயல்பாட்டை திருத்திக் கொள்ள வேண்டியது முதல்வரின் கடமை.
கோவைக்கு, 'டாட்டா' காட்டிய டாடா நிறுவனம், வேற எந்த மாநிலத்துக்கும் போகாம, பா.ஜ., ஆளும் குஜராத்துக்கு போனது தான் இப்ப பிரச்னை!
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு: பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகளை இரண்டாக பிரித்து, 'இண்டியா' கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கபட நாடகம் ஆடி, தற்காலிகமாக பா.ஜ., கூட்டணியை விட்டு பிரிந்துள்ளார்.
இவர் சொன்னா சரியா தான் இருக்கும்... இப்படி கணக்கு போட்டு தானே மக்கள் நலக்கூட்டணி ஆரம்பிச்சு, 2016ல் தி.மு.க.,வை கவிழ்த்தாங்க!
பா.ஜ., உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் பேச்சு: பிரதமர் மோடி, 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத தலைவராக ஆட்சி செய்துள்ளார். உலகில், 11வது இடத்தில் இருந்த பொருளாதாரத்தை, ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் பா.ஜ.,விற்கு எம்.பி.,க்களே இல்லாத போதும், இங்கு பல்வேறு திட்டங்கள் வழங்கியுள்ளார்.
அதனால தானே அதிகாலை 2:00 மணின்னு கூட பார்க்காமல், துாங்கி கொண்டிருந்த மனைவியை எழுப்பி ஆலோசனை நடத்தி, சொந்த கட்சியையே பா.ஜ.,வில் இணைச்சீங்க!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு: பா.ஜ., அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆனால், தமிழக சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தெரிவித்த காலை சிற்றுண்டி திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், இலவச பஸ் பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம் என ஏராளமான திட்டங்களை அள்ளி தந்த தி.மு.க., அரசு, மீதமுள்ள, 20 சதவீதம் வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றி விடும்.
மீத வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இருக்கட்டும்... தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் தானே தெரியும், எந்தெந்த கட்டணத்தை ஏத்த போறாங்கன்னு!

