PUBLISHED ON : ஏப் 21, 2024 12:00 AM

திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் பேட்டி: தி.மு.க.,
கூட்டணி மற்றும் அ.தி.மு.க.,வினரின் பண பட்டுவாடா குறித்து புகார் அளிக்க,
தேர்தல் அலுவலர்களுக்கு தொடர்பு கொண்டால் போனை எடுக்கவில்லை. நேரடியாக மனு
அளிக்க வந்தால், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் ஒருவர் கூட
இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
பூண்டு, புண்ணாக்கு விற்கிறவங்க பணத்தை மட்டும் தான் பறக்கும் படை பறிக்கும்னு இவருக்கு தெரியாதா?
தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் பேச்சு: பா.ஜ., ஒரு மதவாத கட்சி என்பதை தாண்டி, தமிழகத்திற்கு நேரடியாக பச்சை துரோகம் செய்யும் கட்சியாக மாறி உள்ளது. கடந்த மழையின் போது சென்னை மற்றும் தென் மாவட்டங்களை திரும்பிப் பார்க்காத மோடி, தற்போது அடிக்கடி தமிழகம் வருகிறார். இந்த தேர்தலில், 200 தொகுதிகளில் கூட பா.ஜ., வெற்றி பெறாது.
இங்கே வெள்ளம் கரைபுரண்ட போது, இவங்க தலைவர் ஸ்டாலினும், 'இண்டியா' கூட்டணி கூட்டத்துக்கு தான் போயிருந்தார் என்பது தெரியுமா?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கோவைக்கு வரவிருந்த டாடா செமி கண்டக்டர் தொழிற்சாலையை, மிரட்டி உருட்டி குஜராத்துக்கு கொண்டு சென்றதாக சில தினங்களுக்கு முன் ஸ்டாலின் கூறியிருந்தார். அதே டாடா நிறுவனம், 7,500 கோடி ரூபாய் முதலீட்டில், ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை, தமிழகத்தில் துவக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த முதலீட்டையும் திறமையற்ற நிர்வாகத்தால் கோட்டை விட்டு, குஜராத்திற்கு தாரை வார்த்து, குஜராத் மிரட்டி விட்டது, கொண்டு போய் விட்டது என்று புலம்புவதை தவிர்க்க வேண்டும்.
இவர் சொல்றதை பார்த்தால், ஜாகுவார் லேண்ட் ரோவர் கம்பெனியையும் குஜராத்துக்கு, 'துாக்க' வேலைகள் துவங்கிடுச்சோ?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: துாத்துக்குடி தேர்தல் பிரசாரத்தின் போது 1,500 ரூபாயை தொலைத்த மூதாட்டிக்கு முதல்வர் உதவிக்கரம் நீட்டினார். ஆனால், தமிழக அரசு மருத்துவர்கள் மாதா மாதம் சம்பளத்தில் 40,000 ரூபாயை தொலைத்து விட்டு நிற்பதை கண்டுகொள்ளாமல் உள்ளார். எங்களுக்கு அரசாணை 354ன்படி ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் தேர்தல் முடிஞ்சிடுச்சு... இவரை தொடர்ந்து, இனி ஒவ்வொரு சங்கமா தங்கள் பிரச்னைகளை அடுக்கி அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பிச்சிடுவாங்க!

