PUBLISHED ON : ஏப் 22, 2024 12:00 AM

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி:
தேர்தல்
அமைதியாக நடந்தது. நான் தொடர்ந்து இத்தொகுதியில் போட்டியிட்டு வந்ததன்
நோக்கம் தற்போது நிறைவேறியுள்ளது. தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது
தவிர்க்கப்பட வேண்டும் என்பது என் கனவு. இந்த தேர்தலில் எந்த கட்சியும்,
யாருக்கும், தென்காசியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என்பது சந்தோஷம்
தரக்கூடியது. தி.மு.க.,வும் இம்முறை ஓட்டுக்கு பணம் தரவில்லை. வரும்
தேர்தல்களிலும் அவர்கள் அதை பின்பற்ற வேண்டும்.
'தென்காசியில் வெற்றி எளிது; அதுக்காக பணம் செலவழிக்க வேண்டாம்'னு, தி.மு.க., முடிவு செஞ்சிட்டாங்களோ?
தமிழக, பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் ஓட்டுச்சாவடியில் ஒருவர் கூட ஓட்டளிக்காதது வருந்தத்தக்கது. அவர்களை சமாதானப்படுத்த முடியாத நிலையில், அந்த ஊர் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை புறக்கணித்தது, மாநில அரசின் இயலாமையை, அலட்சிய நிர்வாகத்தை உணர்த்துகிறது.
பொறுப்பான, மத்திய ஆளுங்கட்சியான இவங்க, அந்த மக்களை சமாதானப்படுத்தி இருக்கலாமே!
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் ஈஸ்வரன் பேட்டி: தமிழகத்தில், 72 சதவீதம் ஓட்டு பதிவாகிஉள்ளது. அகில இந்திய அளவில், 35 சதவீதம் பேர் ஓட்டு போடுவதில்லை. ஒரு ஜனநாயக நாட்டில், 35 சதவீதம் பேர் ஓட்டு போடாவிட்டால், ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என, பேசுவதை கைவிட்டு, தகுதியான வாக்காளர்கள் அனைவரும், 100 சதவீதம் ஓட்டு போட வேண்டும் என்பதை, தேர்தல் ஆணையம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
கட்டாய ஓட்டளிப்பு சட்ட திருத்தம், ஒரே நாடு; ஒரே தேர்தல் நடைமுறை வந்தால் எதிர்க்கட்சிகள் ஒத்துக்குமா?
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க, திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் பேட்டி: 'மத்தியில் ஆட்சி அமைந்ததும் மேகதாதுவில் அணை கட்டுவோம்; அதற்காகத் தான் நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன்; இது தான் எங்கள் லட்சியம்' என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள முதல்வர் ஸ்டாலின், இதற்காக எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை.
உண்மையில், தி.மு.க.,வுக்கு, பா.ஜ., தரும் குடைச்சலை விட, கர்நாடக காங்கிரஸ் அரசு தரும் குடைச்சல் தான் ரொம்ப அதிகம்!

