PUBLISHED ON : ஏப் 29, 2024 12:00 AM

தமிழக, பா.ஜ., துணைத் தலைவர், கே.பி.ராமலிங்கம் பேட்டி:
தமிழகத்தில்
ஆண்ட, ஆளுங்கட்சிகள், ஓட்டுக்கு பணம் வழங்கிய போதும், அதை வாங்கிய மக்கள்,
மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்துடன், பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டனர்.
பெரும்பாலான தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெறும். முதல் கட்ட தேர்தல் நடந்த,
100க்கும் மேற்பட்ட தொகுதிகளில், 10 முதல், 15 தொகுதிகளில், காங்.,
கூட்டணி வரலாம்... தமிழகத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
'முதல்
கட்ட தேர்தலில் எங்களுக்கு தான் வெற்றி'ன்னு, 'இண்டியா' கூட்டணியும், உங்க
கூட்டணியும் மாறி மாறி சொல்றது, அடுத்த கட்ட தேர்தலின் ஓட்டுகளை அறுவடை
செய்ய தானே!
அகில இந்திய நாடார் மாணவர் பேரவை அமைப்பாளர், வேல் ஆதித்தன் அறிக்கை: தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாட்டிற்கும், அதற்கு அடிமையாவோர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, ஆலோசித்து, போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அவங்கவங்க கட்சிக்காரங்களிடம், போதை பொருள் விற்க கூடாதுன்னு அறிவுறுத்தினாலே, 80 சதவீதம் போதை பொருள் நடமாட்டம் குறைஞ்சிடும்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: சென்னை பல்கலை, கோவை பாரதியார் பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை ஆகியவை துணை வேந்தர்கள் இல்லாமல் இயங்குகின்றன. இதற்கு காரணம், ஆட்சியில் இருக்கும் போது ஒரு கொள்கை; ஆட்சியில் இல்லாத போது ஒரு கொள்கை என்ற இரட்டை நிலைப்பாட்டை, தி.மு.க., எடுத்திருப்பது தான். 'இண்டியா' கூட்டணிக்கே தலைமையில்லை என்ற நிலையில், பல்கலைகளுக்கு எதற்கு தலைமை என, தி.மு.க., அரசு நினைத்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுறது என்பது இது தானா?
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் பேட்டி: கிருஷ்ணகிரி உட்பட தமிழகத்தில், பா.ஜ., போட்டியிட்ட, 19 தொகுதிகளில், 15 தொகுதிகளில் நிச்சயம் வெல்லும். மொத்தம், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார். அப்போது, அ.தி.மு.க., என்ன ஆகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
பா.ஜ., ஆட்சி அமைந்ததும், அ.தி.மு.க.,வுக்கு, 'கண்டம்' காத்திருக்குன்னு சொல்லாம சொல்றாரோ?

