PUBLISHED ON : ஏப் 30, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: சமீபத்தில்
சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இந்தியாவில் 88 சதவீதம் இளைஞர்கள் வேலை
இல்லாமல் இருப்பதாக, ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், 15 முதல் 29
வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை பட்டியலில் வைத்துள்ளது. இந்த தரவுகள் தவறானவை.
முறையான அரசின் புள்ளி விபரங்களை தெரிந்து கொள்ளாது, உள்நோக்கத்தோடு
வெளியிடப்பட்டுள்ளது. அன்னிய அமைப்புகள் எப்படியெல்லாம் இந்தியா குறித்து,
தேர்தல் நேரத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புகின்றன என்பதை இந்த
அறிக்கை உணர்த்துகிறது.
ஆய்வறிக்கை என்ற பெயரில் இதுபோன்ற அறிக்கைகள் சர்வ சாதாரணமா வெளியாகுது... அதில் உண்மை தன்மை தான் கேள்விக்குறி!
பா.ஜ., மாநில செயலர் சுமதி வெங்கடேசன் பேட்டி: 'ஜாதிவாரி கணக்கெடுப்புடன் சேர்த்து, பொருளாதார ரீதியான கணக்கெடுப்பையும் செய்ய வேண்டும்' என, ராகுல் கூறியுள்ளார். இதற்கு பிரதமர் மோடி, 'ஜாதி கணக்கெடுப்புடன் பொருளாதார கணக்கெடுப்பை எதற்கு எடுக்க வேண்டும்' என, கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவரின் பொருளாதாரம் என்பது அவரது உழைப்பால் சேர்க்கப்பட்டது. அவரது உழைப்பை எப்படி பிறருக்கு பிரித்து கொடுக்க முடியும்?
கணக்கெடுப்புல, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிக்காரங்களுக்கு சொத்து அதிகமா இருந்தால், திட்டத்தை அப்படியே கைவிட்ருவாங்க பாருங்க!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி: ராஜஸ்தான் பிரசாரத்தில் பிரதமர் மோடி எந்த இடத்திலும் முஸ்லிம் என்ற வார்த்தையை ஒரு முறை கூட பயன்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பிரதமருக்கு எதிராக மனு அளித்தாலும், மத ரீதியாக பேசாததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை.
தேர்தல் ஆணையத்தின் பதிலை இவர் முந்திக்கிட்டு சொன்னா, எதிர்க்கட்சிகள் இவங்க கட்சியை ஆணையத்தோடு இணைத்து தானே பேசுவாங்க!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: ரேஷன் அரிசி கடத்தலை, ஆரம்பத்திலேயே தடுக்க தவறியதால் தற்போது, பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு, தமிழகத்தில் மோசமான சூழல் நிலவி வருவது வேதனை அளிக்கிறது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் இல்லத்தில் வீசப்பட்டிருக்கும் பெட்ரோல் குண்டு சம்பவத்தால், தமிழ கத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.
கல்லுாரி மாணவியரோடு சேர்த்து, பஸ்சை கொளுத்திய சம்பவங்கள் எல்லாம் மறந்து போச்சா?

