PUBLISHED ON : மே 01, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை: ஆயிரக்கணக்கில்
முதலீடு செய்தால், லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்க முடியும் என ஆசை கூறி,
பொதுமக்களை ஏமாற்றி வரும் கோவையை சேர்ந்த தனியார் நிறுவன மோசடிகளுக்கு
எதிராக போராடி வரும் கோவை மாவட்ட பா.ம.க., செயலர் அசோக்ஸ்ரீநிதிக்கு கொலை
மிரட்டில் விடுக்கப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவன நிதி மோசடிகளையும்,
கொலை மிரட்டல்களையும் அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது
கண்டிக்கத்தக்கது.
அந்த நிதி நிறுவன பின்னணியில் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் யாராச்சும் இருக்காங்களோ என்னமோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: நல்லோர் ஒருவர் மனதுக்குள் மவுன மாய் கசியும் கண்ணீர், ஆயிரம் அணுகுண்டுகளுக்கு சமம் என்பதை, காலம் கட்டாயம் உணர்த்தும். கட்சி தொண்டர்களிடம் ஒரு எரிமலை புரட்சிக்கு முகூர்த்தம் குறிக்கும் ஜூன் 4ம் நாளில், திரிக்கு தீயிடும் திருப்பத்தை, தர்மம் தானாக முன்வந்து கட்டாயம் நிகழ்த்தும்.
அ.தி.மு.க.,வின் தோல்வியை பரம எதிரியான தி.மு.க.,வை விட இவங்க தான் அதிகமா எதிர்பார்க்குறாங்க போல!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'பார்ப்பனரல்லாதோர் கொள்கை பிரகடனம் வெளியிட்டு, திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்' என, பி.டி.தியாகராயர் பிறந்த நாளில் முதல்வர் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு ஜாதிக்கு எதிரான பிரகடனத்தை பாராட்டி, அதற்கு திராவிடம் என்ற பெயரையும் சூட்டி, அதை உரிமை என்று சொல்வதற்கு பெயர் ஜாதி வெறுப்பு. நான் அனைவருக்குமான முதல்வர் என்று மார்தட்டி கொண்டதை முதல்வர் மறந்து விட்டாரா?
இதுபோன்ற அறிக்கைகளை எல்லாம் வெளியிடும் போது மட்டும் அவர் தி.மு.க., தலைவர் என எடுத்துக்கணும்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை: தி.மு.க., அரசு கோடையை சமாளிக்க, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேர்தல் வெற்றிக்கு பல கோடி ரூபாயை விளம்பரத்துக்காக அள்ளிக் கொடுத்த அரசு, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும். போதை கலாசாரத்தை அடியோடு ஒழித்துக் கட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
அரசு செய்யுறது இருக்கட்டும்... இவங்க விசுவாசிகள் தமிழகத்தில் எங்காவது தண்ணீர் பந்தல் திறந்தாங்களா?