PUBLISHED ON : மே 02, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., மீனவரணி தலைவர் எம்.சி.முனுசாமி பேச்சு: ராமேஸ்வரம்
மீனவர்கள் 24 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை
விடுவிக்க மத்திய அரசு வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்க, தமிழக பா.ஜ., தலைவர்
அண்ணாமலையிடம் முறையிட்டிருந்தோம். அவரது முயற்சியால், மீனவர்கள் அனைவரும்
விடுவிக்கப்பட்டனர். மீனவ மக்களின் அன்பை பெற்ற எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா
வரிசையில் அண்ணாமலையும் இடம் பெற்று விட்டார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு அண்ணாமலையை ஒப்பிடுவது, முனுசாமியின் பழைய அ.தி.மு.க., பாசமா அல்லது பழனிசாமியை வெறுப்பேற்றும் நோக்கமா?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த திருத்தணி ஹோட்டல் உரிமையாளர் ராமு, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார். ஆன்லைன் ரம்மி எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு ராமு தற்கொலை சிறந்த எடுத்துக்காட்டு.
எவ்வளவு எடுத்துக் காட்டினாலும் ஆன்லைனில் சூதாடுறவங்க ஆடிக்கிட்டும், தற்கொலை முடிவை தேடிக்கிட்டும் தானே இருக்காங்க!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தி.மு.க.,வை வேரோடு வீழ்த்த வேண்டும் என்பதில் வெறி கொண்டு அலையும் பா.ஜ.,வோடு சேர்ந்து, அ.தி.மு.க.,வின் பிறப்பு நோக்கத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு மாறாக, தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளை ஒருமுகப்படுத்த விடாமல் மூன்றாவது அணி அமைத்து, அக்கட்சிக்கு பழனிசாமி மறைமுகமாக முட்டு கொடுப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
அப்ப அ.தி.மு.க.,வை அழிக்க பார்க்கும் பா.ஜ.,வோடு இவங்க தலைவர் கூட்டு வச்சிருக்காரேன்னு யாரும் கேட்க மாட்டாங்களா?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் சிவன் நாயர், அவரது மனைவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ஆர்.கே.நகரில் இளைஞர் வெட்டி கொலை; மீஞ்சூரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு; தண்டையார்பேட்டையில் அடையாளம் தெரியாத கும்பலால் ஒருவர் படுகொலை என, தமிழகத்தின் தலைநகரான சென்னையை கொலை நகராக மாற்றிக் கொண்டிருக்கும், தமிழக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்துக்கு உரியது.
அடிக்கடி துப்பாக்கி சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கணும்... மாவு கட்டு போட்டுக்கிட்டே இருக்கணும்... அப்பதான் ரவுடிகள் கொட்டம் அடங்கும்!

