PUBLISHED ON : மே 12, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'இரு
ஆண்டுகளுக்கு முன், என் பொண்ணு நீட் எழுத சென்றபோது, புர்காவை கழற்றச்
சொன்னாங்க. நீட்டும் வேணாம்; ஒண்ணும் வேணாம் என வீட்டுக்கு வந்துட்டாங்க'
என, இயக்குனர் அமீர் கூறியுள்ளார். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே,
எதெல்லாம் அணியக்கூடாது என்ற சட்ட திட்டங்கள், விதிகளை ஏற்று தான்
விண்ணப்பம் செய்திருப்பார் அவரது மகள். ஆனால், பொது வெளியில் அதை மத
ரீதியாக உருமாற்றம் செய்யும் அவலம் ஏனோ?
ஜாபர் சாதிக் வழக்குல தானும் சிக்கி இருப்பது அமீருக்கு மறந்து போயிருக்குமோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: எந்த தடுப்பு மருந்து களும் பல கட்ட சோதனைக்கு பின் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. கொரோனா தடுப்பு மருந்துகள், இக்கட்டான கால கட்டத்தில் நமக்கு துணை நின்றன. இந்த தடுப்பூசிகள், 10 லட்சம் பேரில் ஒருவருக்கு அரிதாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கொரோனா தடுப்பூசி குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை.
இது, தடுப்பூசி போட்டவங் களுக்கு ஆறுதலா; இல்ல, இவங்க ஆட்சியில் போட்டதால் தர்ற ஆதரவா?
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி பேட்டி: சவுக்கு சங்கர் பா.ஜ., மற்றும் என்னையும் விமர்சனம் செய்திருக்கிறார். அதற்காக, கஞ்சா வழக்கு பதிவு செய்யும் பழைய நடைமுறையை, தமிழக அரசு கையில் எடுத்துள்ளது விசித்திரமாக உள்ளது.
என்ன சொல்ல வர்றீங்க... கஞ்சா வழக்குக்கு பதில் வேறு ஏதாச்சும் வழக்கு போட சொல்றீங்களா?
நடிகரும், தயாரிப்பாளருமான தி.மு.க., நிர்வாகி ஜெ.எம்.பஷீர் அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் தலை நிமிர்ந்தது தமிழகம். தமிழக பொருளாதார வளர்ச்சி, 10.69 சதவீதமாக உயர்ந்துள்ளது என, ஆய்வறிக்கை கூறுகிறது. இது, இந்திய அளவை விட அதிகம். வெளிநாடுகளிலும் தமிழக திட்டங்களை பின்பற்ற துவங்கி விட்டனர். வேட்டி கட்டிய தமிழன் இந்தியாவை ஆளப்போகும் நாள் வந்து விட்டது. நாட்டை காக்க தேசிய தலைவர் ஸ்டாலின் தயாராகி விட்டார்.
ஓவரா உணர்ச்சி வசப்படுறாரே... 'பசை'யான பதவிக்கு ஏதும் அப்ளிகேஷன் போட்டிருப்பாரோ?