PUBLISHED ON : மே 17, 2024 12:00 AM

திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி அறிக்கை: லோக்சபா தேர்தலில்,
பா.ஜ.,வின் தோல்வி உறுதியான நிலையில் உச்சக்கட்டத்தில் பா.ஜ., அச்சத்தில்
அல்லாடுகிறது. அவர்கள் எந்த கட்டத்திற்கும் செல்லக் கூடியவர்கள். ஆகவே,
'இண்டியா' கூட்டணியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேர்தல்லயே நிற்காத இவருக்கு இருக்கிற பயம் கூட, 'இண்டியா' கூட்டணி தலைவர்களுக்கு இல்லையே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: பிளஸ் 1 தேர்ச்சி விகிதங்களிலும் வட மாவட்டங்கள் கடைசி இடங்களை பிடித்துள்ளன. கடைசி 15 இடங்களை பிடித்த மாவட்டங்களில், 13 மாவட்டங்கள் வடக்கு மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள். வடமாவட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அப்பகுதி கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
வேளாண் பட்ஜெட், நிழல் பட்ஜெட் எல்லாம் போடுற நீங்களே, வடமாவட்ட கல்வி வளர்ச்சிக்கும் சிறப்பு திட்டங்களை வகுத்து, அரசிடம் தரலாமே!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: இலவசங்கள் தவறில்லை. ஆனால், அவை அரும்பாடுபட்டு உருவாக்கிய கட்டமைப்பை எப்படி குலைக்கின்றன, பொருளாதாரத்தை எப்படி சீரழிக்கின்றன என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், ஓட்டுகளை பெறுவதற்காக, எடுத்தோம், கவிழ்த்தோம் என செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இலவசங்கள் தவறில்லை. ஆனால் யாருக்கு தேவையோ, அவர்களுக்கு மட்டுமே அவை கிடைக்க வேண்டும்.
'ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என்பது போல, மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை கொடுத்துட்டு, ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பது நியாயமே இல்லை!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்அறிக்கை: தமிழகத்தில் கர்ப்பிணியர், இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்களுக்கு, 14,000 ரூபாய் நிதி, 4,000 ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. கருவுற்ற காலத்தில் சத்தான உணவுகளும், பிறந்த குழந்தைக்கு ஊட்டச் சத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே, மகப்பேறு நிதியுதவி திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், குழந்தை பிறந்து பல மாதங்களுக்குப் பின்னும், மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில்லை. இதனால், இத்திட்டத்தின் நோக்கமே சிதைந்து விடுகிறது.
கர்ப்பிணியர் நிதியுதவியை தான், மகளிர் உரிமை திட்டத்துக்கு மடை மாற்றி விடுறாங்களோ?

