PUBLISHED ON : மே 19, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழகத்தில், அமலாக்க
துறை சோதனை உள்ளிட்ட பல காரணங்களால் மூடப்பட்ட, 26 ஆற்று மணல் குவாரிகளை
மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி
அளிக்கின்றன. இயற்கை வளங்களையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்க
குரல்கள் எழுந்து வரும் நிலையில், அந்த நோக்கங்களை சீர்குலைக்கும் வகையில்,
மணல் குவாரிகளை மீண்டும் திறக்க முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
உங்களுக்கு
அந்த குரல்கள் கேட்குது... அரசுக்கு, 'நாங்க சம்பாதிக்க ஏதாச்சும்
பண்ணுங்க'ன்னு உடன்பிறப்புக்கள் புலம்புவது கேட்டுதோ என்னமோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி அரசியல் செய்த காலத்தில், இரவல் மூளைகளுக்கு அவசியம் இல்லாதிருந்தது. ஆனால், கரன்சியை தவிர, அறிவோ, ஆற்றலோ, கையிருப்பு கடுகளவும் இல்லாத காலிடப் பாக்கள் தான், தங்கள் கட்சியினரை நம்பாமல், ஏமாற்றி பணம் பறிக்கும் எத்தர்களிடம், கோடிகளை கொடுத்து ஏமாந்திருக்கின்றனர்.
இவர் சொல்றது உண்மையாகவே இருந்தாலும், இப்படி எல்லாம் பேசினால் ஆட்சியாளர்கள் இவரை அடுத்த சவுக்கு சங்கரா ஆக்கிடுவாங்களே!
அ.ம.மு.க., பொதுச் செயலர்தினகரன் அறிக்கை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வரும் 20ம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை, சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இந்த எச்சரிக்கையை வழக்கம்போல் அலட்சியமாக எதிர்கொள்ளாமல், கனமழைக்கு வாய்ப்பிருக்கும் மாவட்டங்களில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
புயல் உருவாகுற காலத்துலயே எச்சரிக்கையை அரசு கண்டுக் காது... இது கொளுத்தும் கோடை காலம் என்பதால் இந்த, 'அலெர்ட்' அவசியம் தான்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: சைதாப்பேட்டையில் ஒரு வீட்டின் கதவை உடைத்து, உள்ளே புகுந்து 27 வயது நபரை சரமாரியாக வெட்டிக் கொன்றிருக்கிறது ஒரு கும்பல். இந்த கொடூர கொலை, சென்னை நகரின் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
நண்பனின் மனைவியை அபகரித்து குடும்பம் நடத்திய நபர் கொலை செய்யப்பட்டதற்கும், சட்டம் - ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம்?

