PUBLISHED ON : மே 27, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி:
யு - டியூபர் சங்கர்
பேசியது மிகவும் தவறானது. முதல்வர், அமைச்சர்கள், போலீசார், பெண் போலீசார்
குறித்து பேசியது, எல்லாரையும் வருத்தம் அடைய செய்திருக்கிறது. சங்கர்
மீதான தமிழக அரசின் கைது நடவடிக்கையில் தவறில்லை. சட்டம் - ஒழுங்கு மீது,
அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அதெல்லாம் சரி... அவர் கஞ்சா கடத்தியது உண்மையா, ஜோடிக்கப்பட்ட வழக்கான்னு ஏதாவது கருத்து கிடைக்குமா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: 'ஜெயலலிதா ஹிந்துத்துவா தலைவராக இருந்தார்' என, தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறுவது நிராகரிக்கப்பட வேண்டிய கருத்து. தன்னைப் போல் பிறரை எண்ணும் மனப்பான்மை, பா.ஜ.,வுக்கும், அண்ணாமலைக்கும் உண்டு. ஜெயலலிதா ஹிந்துவாக இருந்தாலும், ஜாதி, மதம், இனம், மொழி கடந்து, அனைவரும் நேசிக்கக்கூடிய தலைவர். இவர்களைப் போல அல்ல!
அண்ணாமலை பேச்சால், இப்பல்லாம் ஆளுங்கட்சியை விட, அ.தி.மு.க.,வினர் தான் அதிகம் எரிச்சலடையறாங்க!
தமிழக, பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: போக்குவரத்து விதிகளை மீறும் டிரைவர்களுக்கு அபராதம் விதிப்பது சரி... ஆனால், தங்கள் துறைக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இதை கருதி, பேச்சு நடத்தி, சமரசம் ஏற்பட்டது என அறிவித்து விட்டு, மீண்டும் முந்தைய நிலைக்கே சென்று விடாமல், காவல் துறையினர் இந்த நடவடிக்கைகளை தொடர வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.
சட்டம் கடமையை செய்யக்கூடாதுன்னு தானே, கட்டிப்பிடி வைத்தியமே செஞ்சிருக்காங்க!
பா.ம.க., நிறுவனர் -ராமதாஸ் அறிக்கை: வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர் பணிக்கான, டி.என்.பி.எஸ்.சி., நேர்முகத் தேர்வில், மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வில் மிகக் குறைந்த அளவாக, 241 மதிப்பெண் மட்டுமே எடுத்த ஒருவருக்கு, 45 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 300க்கும் குறைவான மதிப்பெண் எடுத்த மூவருக்கு, நேர்முகத் தேர்வில், 45 மதிப்பெண் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பலருக்கு, நேர்முக தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
ஒரு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துட்டாங்களேன்னு மற்றொரு தேர்வில் குறைச்சிருப்பாங்களோ?

