PUBLISHED ON : மே 28, 2024 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவர் அணி இணை செயலர் டாக்டர் சரவணன் பேட்டி: தமிழகத்தில்,
தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, கொசு
உற்பத்திக்கு வழிவகுத்து, டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் ஆபத்து உள்ளது.
சிங்கப்பூரில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு
மெத்தனமாக இல்லாமல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
வரும் முன் காப்போம்னு ஏதாவது திட்டத்துக்கு பெயர் வேணும்னா வைப்பாங்க... நோய் எல்லாம் பரவினா தான் நடவடிக்கையை பற்றியே யோசிப்பாங்க!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: ஹிந்து திருவள்ளுவரை, ஹிந்து என சொல்வது தவறா? அதுபோல் ஜெயலலிதா ஹிந்துவாக இருந்தார்; ஹிந்துவாக வாழ்ந்தார். அ.தி.மு.க., ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறதா? ஜெயலலிதா பாதையை விட்டு விலகி செல்கிறதா? வாக்காளர்கள் முடிவு செய்வர்.
ஜெயலலிதா என்னவா இருந்தா இவங்களுக்கு என்ன...? மறைந்த அவரை பற்றி விவாதம் கிளப்புவதில், வெறும் அரசியல் மட்டுமே உள்ளது!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தி.மு.க., வின் மூன்றாண்டு சாதனைகளில் முக்கியமானவை கமலின் 'விக்ரம் - 2'ஐ வெளியிட்டு, அவரது கட்சியையே விற்கிறோம் எனும் நிலைக்கு கொண்டு வந்து, சீட்டில்லா கூட்டணிக்குள் மடக்கியது. காங்கிரஸ், வி.சி., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சி களை குறையில்லாமல் பார்த்துக் கொண்டு, கூட்டுக் குடும்ப முறை அரசியலால், நாட்டுக்கே இலக்கணமாக திகழ்கிறது.
உண்மையில் கூட்டணி கட்சி களை வாயடைத்து வைத்திருப் பதும், கமலை ஒன்றும் இல்லாமல் செய்ததும் தி.மு.க.,வின் மாபெரும் சாதனை தான்!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: இலங்கையில் 1.50 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலகின் மனித உரிமை பேசும் நாடுகள் 15 ஆண்டுகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா., சபையில் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கா விட்டால், இலங்கையுடனான உறவை முறித்துக் கொள்வதாக மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கே நாங்கள் தான் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் என மார்தட்டும் தி.மு.க., கூட்டணி கட்சிகள் இது பற்றி வாய் திறக்கலையே!