PUBLISHED ON : மே 31, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தில் எங்கு
பார்த்தாலும், கொலை, கொள்ளை, திருட்டு, போதை பொருள் புழக்கம், பெண்களுக்கு
எதிரான குற்றங்களால் மக்கள் சுதந்திரமாக நடமாட அச்சப்படும் சூழல் உள்ளது.
இது மூன்றாண்டு தி.மு.க., அரசின் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளுக்கு சிறந்த
உதாரணம். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் காவல் துறையை தட்டி எழுப்பி, சட்டம்
- ஒழுங்கு சீர்கேடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைநகர் சென்னையில் தினமும் நடக்கிற கொலைகளை முதல்ல கட்டுப்படுத்தணும்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: தமிழகத்தில் உள்ள, 39 அரசு மருத்துவ கல்லுாரிகளில், 24 கல்லுாரிகள் அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டவை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், மருத்துவ கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், புதிய அரசு மருத்துவ கல்லுாரிகளை உருவாக்குவோம் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்று மூன்றாண்டுகள் ஆன நிலையில், ஒரு அரசு கல்லுாரியை கூட உருவாக்கவில்லை.
இப்பவாச்சும் பழனிசாமி சிறப்பா ஆட்சி நடத்தினார்னு ஏத்துக்குறீங்களா?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: சித்திரை மாதத்தில் வரும் தமிழ் புத்தாண்டு எப்படி தை மாதத்தில் வரும் என நாம் கேட்டபோது, ஆயிரம் வியாக்கியானங்களை முன் வைத்தவர்கள் தான், திருவள்ளுவர் நாள் எப்படி வைகாசி மாதத்தில் வரும் என கேட்கின்றனர். திருவள்ளுவர் பிறந்த நாளை மாற்றியவர்கள், இவர்கள் தான் தமிழ் புத்தாண்டு தினத்தையும் மாற்ற எத்தனித்தவர்கள் என்பதை, தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
தலைக்கு மேல இருக்கிற பிரச்னைகளுக்கு நடுவே, தமிழக மக்கள் தங்கள் பிறந்த நாளையே மறந்து பல வருஷமாச்சு!
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி., பழனிசாமி பேச்சு: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதய குமார், செய்தியாளர்கள் சந்திப்பில், பன்னீர்செல்வம் தி.மு.க., தலைவர்களை புகழ்கிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். தி.மு.க.,வின் பிரதமர் வேட்பாளர் ராகுலை புகழ்ந்து, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். பன்னீர் செல்வத்துக்கு பொருந்தியது, செல்லுார் ராஜுக்கு பொருந்தாதா என்ற கேள்வி, ஒவ்வொரு அ.தி.மு.க., தொண்டர்களிடமும் எழும்.
செல்லுார் ராஜு எதை சொன்னாலும், அ.தி.மு.க.,வினர் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் காமெடியா ரசிக்க ஆரம்பிச்சிட்டாங் கன்னு இவருக்கு தெரியாதா?