PUBLISHED ON : ஜூலை 02, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: பாலாற்றின் குறுக்கே,
ஆந்திர அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்ட முயற்சிப்பது, 1892ல் போடப்பட்ட,
மதராஸ் - மைசூரு ஒப்பந்தத்தை மீறுவதோடு, உச்ச நீதிமன்ற தீர்ப்பையும்
அவமதிக்கும் செயல். மாநில உரிமை, மக்கள் நலனில் அக்கறை செலுத்தும்
சந்திரபாபு நாயுடு, பாலாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டி, தமிழக
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க முயற்சிப்பது மிகுந்த வேதனையை
ஏற்படுத்துகிறது.
அண்டை மாநிலங்களில், யார் பதவிக்கு வந்தாலும், தமிழகத்திற்கு ஆப்பு அடிப்பதில் தான் ஆர்வமா இருக்காங்க!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: மக்கள் தொகை கணக்கெடுப்பை, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது மத்திய அரசின் பணி. அதேபோல் ஜாதி வாரி கணக்கெடுப்பு, மாநில அரசின் பணி. அதற்கு எந்த தடையும் இல்லை. மாநில சுயாட்சி பேசும் தி.மு.க., சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மாநில அரசின் உரிமையை, மத்திய அரசுக்கு அடகு வைத்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக பழனிசாமி போட்ட அரசாணையை நடைமுறைப்படுத்துவதில் தி.மு.க., அரசுக்கு என்ன பிரச்னை?
ஒருவேளை, பழனிசாமி ஆட்சியில் அரசாணை வெளியிட்டது தான் பிரச்னையோ, என்னமோ?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: 'சென்னை மெட்ரோ அலகு - 2 பணிகளுக்காக, இந்த நிதியாண்டு, 12,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதை தந்திருந்தால், 25,000 பஸ்கள் வாங்கி இருக்கலாம். 30,000 கி.மீ., கிராம சாலைகள் அமைத்திருக்கலாம். 3.50 லட்சம் வீடுகள் கட்டியிருக்கலாம்' என, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். பஸ்கள் வாங்க, சாலைகள் அமைக்க, வீடுகள் கட்ட நிதி ஒதுக்காமல், மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுக்காத திட்டத்திற்கு, மாநில அரசு நிதி ஒதுக்கியது ஏன் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும்.
எந்த திட்டத்துல ஆட்சியாளர் களுக்கு அதிக, 'பயன்' கிடைக்குமோ, அதுக்கு தானே நிதி ஒதுக்குவாங்க!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: பழனிசாமி,தன் தலைமை தோல்வியை மறைக்கவும், தொண்டர்களிடம் உருவாகி இருக்கும் எதிர்ப்பையும், ஒற்றுமையை வலியுறுத்தும் அவர்கள் கருத்தை மடை மாற்றவும், மழுங்கடிக்கவும் கருப்பு சட்டை நாடகம் போடுகிறார்.
ஏதோ, பழனிசாமிக்கு எதிராக தமிழகம் முழுக்க கட்சிக்காரங்க போராட்டத்துல இறங்கிட்ட மாதிரி சொல்றாரே!