PUBLISHED ON : ஜூலை 04, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை
ஒழிக்க, காகித குடுவைகளில் 90 மி.லி., மதுவை விற்க டாஸ்மாக் முடிவு
செய்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. இது, தமிழகத்தை
மீட்டெடுக்க முடியாத கலாசார சீரழிவு; படுகுழிக்குள் தள்ளி விடும். டாஸ்மாக்
கடைகளில் குறைந்தபட்சமாக 140 ரூபாய்க்கு மது கிடைக்கிறது. இதனால் தான்
குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர் என்ற
டாஸ்மாக்கின் வாதத்தை ஏற்க முடியாது.
விலையா பிரச்னை... 'டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை; அதான் கள்ளச்சாராயத்தை தேடுகின்றனர்' என்று அமைச்சர் துரைமுருகன் சொன்னாரே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: பார்லிமென்டில் உறுப்பினர் எப்படி பேசக்கூடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ராகுலின் பேச்சு. தேர்தலில் அடைந்த படுதோல்வி, விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு போயுள்ளதை, அவரது முதிர்ச்சியற்ற பேச்சு உணர்த்துகிறது. காங்கிரஸ் தொடர்ந்து அழிவுப்பாதையில் சென்று கொண்டிருப்பதற்கான அச்சாரம் அவரது பேச்சு.
பேசி, பேசியே தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திராவிட மாடல் ஆட்சியாளர்கள் தான், ராகுலுக்கு இப்படி எல்லாம் பேச ஆலோசனை கொடுத்திருப்பாங்களோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா என எதிர்கொண்ட எல்லா அணிகளையும் வென்று, இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றிருக்கிறது. இதற்கு ஒற்றுமையும், 'ஈகோ' இல்லாத கூட்டு முயற்சியும் தான் காரணம். இது விளையாட்டுக்கு மட்டு மல்ல; அரசியலுக்கும் அவசியம். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, அவரை சுத்தி நின்று புலம்பும் ஆட்கள் சொல்லுங்கப்பா.
அப்ப விராட் கோலி, ரோகித் சர்மா மாதிரி, அடுத்த தேர்தலோட பன்னீரும், பழனிசாமியும் ஓய்வை அறிவிச்சிடுவாங்களா?
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் பேச்சு: முதல்வர் ஸ்டாலின் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக தான் இருந்து வருகிறார். அதனால் தான் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கொண்டு வந்தார். ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கினார். தன்னால் முடிந்த அளவு விவசாயிகளுக்கு உதவி வருகிறார்.
நொந்து போயிருக்கும் விவசாயி களுக்கு, இந்த மாதிரி ஜால்ராக்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கும்!