PUBLISHED ON : ஜூலை 08, 2024 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை பேட்டி:
மோடி ஆட்சியின்
நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கோரிக்கை
பட்டியலோடு மோடி முன் உட்கார்ந்து விட்டார். இரண்டு மூன்று நாட்கள் என்ன
நடக்க போகுதோ தெரியாது. அடுத்து நிதீஷ்குமார் தயாராக இருக்கிறார். இந்த
ஆட்சி ஒவ்வொரு நாளும் கம்பி மேல் நடப்பது மாதிரி தான்.
'அண்ணன் எப்ப காலியாவார்... திண்ணையை எப்ப பிடிக்கலாம்'னு காங்கிரஸ் காத்திருக்கு... ஆனா, அதுக்கு மோடி இடம் தரமாட்டார்!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: ஜூலை 1ல், டாக்டர்கள் தின நிகழ்ச்சியில் பேசிய சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன், தி.மு.க., அரசு மூன்றாண்டுகளாக டாக்டர்கள் தின நிகழ்ச்சியை நடத்தாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
டாக்டர்களுக்கு இந்த அரசு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில், டாக்டர்கள் தின நிகழ்ச்சி நடத்தாதது குறித்து சிந்திக்கும் மன நிலையில் எந்த டாக்டரும் இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை.
இந்த மாதிரி ஒண்ணு, ரெண்டு நிகழ்ச்சி நடத்தி, மனம் குளிர பேசி, டாக்டர்களை மகிழ்விக்கலாம்னு அமைச்சர் முயற்சிக்கிறாரோ என்னமோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: வளையா செங்கோல் ஏந்தி, வாய்மையும், நேர்மையும் கொண்டு நல்லாட்சி நடத்திய மன்னர்களாக, தலையானங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் துவங்கி, மாமன்னர்கள் மருதிருவர் வரை எண்ணில்லாத பேரரசர்கள் புறநானுாற்று பூகோளத்தில் கோலோச்சியது எல்லாம், மதுரை கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் கண்ணில் படவில்லையாம். அவரது சீழ் பிடித்த சிந்தைக்கு வந்ததெல்லாம், அந்தபுரத்தில் அழகிகளை கொண்டிருந்த சில விதிவிலக்குகள் மட்டும் தானாம்.
நீங்க சொன்ன இந்த நல்ல உதாரணங்களை, 'இண்டியா' கூட்டணி செங்கோலை ஏந்தி இருந்தால் சொல்லி இருப்பாரோ?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, கர்நாடகா அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கபினி அணை நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தான் நியாயம்.
இன்னும் ஒரு வாரத்துல அணைகள் நிரம்பி வழிந்ததும், அவங்க பிழைத்துக் கொள்ள தானா திறந்து விடுவாங்க பாருங்க!