PUBLISHED ON : ஆக 04, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
தங்கள்
அபகரிப்பு திட்டங்கள் தோல்வியுறும் போது, கைப்பற்ற முடியாமல் போனதை
சிதைத்துவிட்டு, வெளியேறவே ஆக்கிரமிப்பாளர்கள் முயற்சிப்பர். ஈராக்கையும்,
ஆப்கனையும் நாசப்படுத்திவெளியேறிய அமெரிக்கா, உக்ரைனை உருக்குலைத்து
கொண்டிருக்கும் ரஷ்யா இதற்கு சாட்சிகள். இப்ப புரியுமே அ.தி.மு.க.,வை
பழனிசாமி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது.
'எங்களை ஏத்துக்கலை என்றால், ஈராக், ஆப்கன் கதிக்கு அ.தி.மு.க.,வும் ஆகிடும்'னு சாபம் விடுறாரோ?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: தொழில் வரியை, 35 சதவீதம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. தனி நபர் துவங்கி, தனியார்நிறுவனங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாக்கும் மாநகராட்சியின் தீர்மானத்தை, அரசு ஏற்கக்கூடாது. தீர்மானத்தை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.
அந்த தீர்மானத்தையே அரசு சொல்லி தான் மாநகராட்சி நிறைவேற்றி இருக்கும்... அது இவருக்கு தெரியாதா?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் குற்ற சம்பவங்களும், ஒரு சில சமயம் கூட தெரியும்; குறைய தெரியும். அதற்கு மாநில அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது' என, அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். குற்றங்களை கட்டுப்படுத்துவதாக இருந்தாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதாக இருந்தாலும், மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என, சட்ட அமைச்சருக்கு தெரியவில்லையே!
மக்களுக்கு எல்லா கட்டணத்தையும் உயர்த்தி, மத்திய அரசை பொழுதுக்கும் வம்பிழுப்பது மட்டும் தான் இப்போதைக்கு மாநில அரசின் தலையாய பொறுப்பாக இருக்கிறதே!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: 'மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது' என பேசும் திரைப்பட இயக்குனர் அமீர் போன்றவர்கள் சற்று அமைதியாக இருக்க வேண்டும். கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினர் மனநிலையை நினைத்துப் பாருங்கள். உதயநிதிக்கும், தி.மு.க.,வுக்கும் அப்புறம் ஜால்ரா போடலாம்.
தான் சார்ந்த சினிமா துறையில், ஆளுங்கட்சி தயவில்லாம ஒண்ணும் பண்ண முடியாதுங்கிறது அமீருக்கு நன்றாகவே தெரியும்!