PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி: இந்தியாவில், 706 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ள நிலையில், மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் இடம் பெற, 182 கல்லுாரிகள் விண்ணப்பித்தன. இவற்றில், சென்னை மருத்துவக் கல்லுாரி 10ம் இடம் பிடித்துள்ளது. 2019ல், 16ம் இடத்தில் இருந்த சென்னை மருத்துவக் கல்லுாரி தற்போது, 10ம் இடம் பிடித்திருப்பது சிறப்பு.இந்த சிறப்புக்கு சொந்தக்காரர்களான அரசு டாக்டர்களுக்கு, உங்க தலைவர் கருணாநிதி வெளியிட்ட ஊதிய உயர்வு அரசாணை 354ஐ அமல்படுத்தி இனிப்பு செய்தி தரலாமே!
மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., அப்துல் சமது பேட்டி: வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்து மக்கள் மீது நடத்தப்படக்கூடிய தாக்குதலை, மனித நேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அதை தடுத்து பாதுகாக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.திராவிட கட்சிகள் எதுவும் இந்த விவகாரத்தில் வாய் திறக்காத நிலையில், உங்களுடைய இந்த கோரிக்கை ஆறுதல் அளிக்கிறது!
சமூக சமத்துவ படை தலைவர் சிவகாமி பேச்சு: முதல்வர்ஸ்டாலினின் சென்னை கொளத்துார் தொகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, ஒரு கும்பல் படுகொலை செய்துள்ளது. முதல்வர் தொகுதியில் நடந்தது போன்று,தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் கொலை நடந்து வருவதை பார்த்தால், சட்டம் - ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆம்ஸ்ட்ராங் கொலையில் நீதி வேண்டும்எனில், சி.பி.ஐ.,யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்.சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தால், மாநில போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்பதை ஆளும் தரப்பே ஒப்புக்கொண்ட மாதிரி ஆகிடுமே!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: சென்னை ஆவடி அருகே, பாதாள சாக்கடையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஷவாயு தாக்கி உயிரிழந்துஉள்ளார். கடந்த வாரம் கடலுாரில் அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்காமல், துாய்மைப் பணியாளர்களை பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம்செய்ய வைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தோம். அதன்பின்னரும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யாததால், மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்கள் மீது கருணை காட்டும் அரசு, இந்த மாதிரி கடைநிலை ஊழியர்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் இருப்பது சரியல்ல!