PUBLISHED ON : ஆக 21, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., பிரமுகரும், நடிகருமானசரத்குமார் அறிக்கை:
'மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு எதிரான
வன்முறை நடந்தால், ஆறு மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய
வேண்டும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பாலியல் குற்றச்செயல்கள் புரிவோர் மீது, தமிழக காவல் துறை உறுதியோடு
செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதெல்லாம் இருக்கட்டும்... சொந்த கட்சியை இரவோடு இரவா பா.ஜ.,வில் இணைத்தீர்களே... ஏதாவது பொறுப்பு கொடுத்தாங்களா?
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி: கோல்கட்டாவில் மருத்துவ முதுநிலை பட்டதாரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்டதற்கு, கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அம்மாநிலத்தில் சட்டம் -- ஒழுங்கு உள்ளதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசிடம் இருந்து, சட்டம் -- ஒழுங்கை சிறிது காலம் மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பல பாலியல் வன்முறைகள் நடந்தபோது கூட வைக்காத கோரிக்கையை, இப்ப வைக்கிறார் என்றால், பாதிக்கப்பட்டது தன்னை போன்ற ஒரு டாக்டர் என்பதாலா?
மாநில வன்னியர் சங்க செயலர் வைத்தி பேட்டி: வரும், 2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையும், அரசியல் மாற்றத்தையும் கொண்டு வர சட்டசபை தொகுதி வாரியாக, பா.ம.க.,வில் மறுகட்டமைப்பு பணி நடந்து வருகிறது. தொகுதி வாரியாக, நிர்வாகிகளை நியமனம் செய்யும் வகையில், விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்வார்.
என்ன தான் கட்டமைப்பை வலுப்படுத்தினாலும், ஜாதி கட்சி என்ற அடையாளம் இருக்கிற வரை, பா.ம.க., ஆட்சிக்கு வருவது சாத்தியமான்னு தெரியல!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 'பன்னீர்செல்வம், சசிகலா, தினகரனைசேர்க்க மாட்டேன்' என, பழனிசாமி வன்ம அரசியலைமுன்னெடுத்தால், அவர்கள் அரசியல் சன்யாசம் போய்விட மாட்டர். தனித்தோ, பா.ஜ.,வோடு இணைந்தோ ஏராளமான தொகுதிகளில் போட்டியிடுவர். கூட்டணி பலத்தில் தி.மு.க., ஆட்சியை தக்க வைக்கும்; இதைத்தான் தி.மு.க., விரும்புகிறது. அதை நிறைவேற்ற பழனிசாமி துடிக்கிறார். இதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நாள் தொண்டர்கள் புரிஞ்சிக்கிட்டாங்கன்னு சொல்றாரு... அடுத்த நாள் புரிஞ்சிக்கணும்னு சொல்றாரு... இவரை புரிஞ்சிக்கவே முடியலயே!