PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM

த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா அறிக்கை: நடிகர் விஜய்க்கு வாழ்வு
கொடுத்தது தமிழ் திரையுலகம். 2006 - 2011 வரை அப்போதைய தி.மு.க.,
ஆட்சியில், ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தமிழ் திரைஉலகம் முடங்கி
இருந்தது; தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும் திரையுலகம் முடங்கி உள்ளது.
தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வந்துள்ள விஜய், முதலில் ஒரு
குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரையுலகத்தை மீட்டு, சிறப்பாக
செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
அப்படியே, விஜய் வண்டியில, 'புட்போர்டு' அடிக்க ஆசைப்படுறாரோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: பல்வேறு வரி மற்றும் கட்டண உயர்வால், தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கட்டடங்களுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது கண்டனத்திற்குரியது. பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்திற்கென தனியாக கடன் வாங்கி தவணை செலுத்தும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இது, ஓட்டளித்த மக்களை வஞ்சிக்கும் செயல்.
இந்த விஷயத்துல, உண்மையான கள நிலவரத்தை தான் இவர் சொல்றாரு!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் தேசிய மாணவர் படை என்ற பெயரில் நடந்த போலி முகாமில் பங்கேற்ற, 12 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள், உடந்தையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு போற போக்குல, 'போக்சோ' வழக்கு குற்றவாளிகளை அடைக்கவே தனி ஜெயில்கட்டணும் போலிருக்கே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப் பட்டதாக கூறப்படும் நிலையில், அதில் வெறும், 1.80 சதவீதம் முதலீடுகள் மட்டுமே செயல் வடிவம் பெற்றுள்ளன. முதலீடுகளை ஈர்க்க, வரும் 27ல் முதல்வர் அமெரிக்கா செல்கிறார். 2022ல் துபாய், கடந்த ஜனவரியில் ஸ்பெயின் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டார்; ஆனால், ஒரு காசு கூட அங்கிருந்து வரவில்லை. துபாய், ஸ்பெயின் பயணங்கள் தோல்வி என்று தான் கருத வேண்டி உள்ளது.
அங்குள்ள தொழிலதிபர்கள், 'போங்க, பின்னாடியே வர்றோம்'னு சொன்னதை நம்பி அறிவிச்சுட்டாங்களோ?

