PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:
அரசியல் கட்சி துவங்கிய நடிகர்
விஜய் தற்போது கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள்.
மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுபவர்களுக்கு ஓட்டு உண்டு
என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.
அப்ப, பெருசா சோபிக்க
முடியாத இவரின், த.மா.கா., உட்பட பல கட்சிகள், மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப
செயல்படலைனு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா?
கோவை தெற்கு தொகுதி, பா.ஜ., -- எம்.எல்.ஏ., வானதி பேட்டி:
அரசாங்க நிகழ்வுகளை கூட்டணி கண்ணோட்டத்தோடு பார்ப்பது தவறு. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லாத நேரத்திலும், பா.ஜ.,வின் மத்திய அமைச்சர்கள், தமிழகத்தில் நடந்த அரசு விழாக்களில் பங்கேற்றுள்ளனர். அரசாங்கங்களுக்கான உறவை, அரசு நடைமுறைகளுக்கான உறவை, அரசியலோடு பொருத்தி பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது.
அதெல்லாம் சரி... அந்த நடைமுறை எல்லாம் வழக்கத்திற்கு மாறா இருந்தால், கிசுகிசுக்கத் தானே செய்வாங்க!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'திராவிட மாடல் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது' என, தெரிவித்துள்ளார். ஆனால், அரசு டாக்டர்களுக்கு கொடுத்த சத்தியத்தை, அதுவும் தன் தந்தையின் அரசாணையை இதுவரை நிறைவேற்றவில்லை என்பதை வேதனையுடன் நினைவுபடுத்துகிறோம்.
எதிர்க்கட்சி தலைவரா இருந்தப்ப, அவர் சர்க்கரை பொங்கல் சாப்பிடுற மாதிரி அல்லவா, சத்தியங்களை செய்து கொடுத்தார்... அதை எல்லாம் ஞாபகம் வைத்து, இப்போது கேட்கலாமா?
மயிலாடுதுறை மாவட்ட, தி.மு.க., பொறியாளர் அணி அமைப்பாளர், காழி.கலைவாணன் பேச்சு:
தி.மு.க.,வில் இளைஞர்கள் யாரும் புதிதாக சேரவில்லை. பொறுப்பாளர்களின் குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் கூட கட்சிக்கு வருவதில்லை. காரணத்தை சிந்திக்க வேண்டும்... ஒருவர் பொறுப்பிற்கு வந்து விட்டால், 30 ஆண்டுகள் தொடர்கிறார். கட்சிக்கு வந்த இளைஞர்கள், முன்னர் மாதிரி, கொடி பிடிக்க விரும்புவதில்லை. உரிய அங்கீகாரம் கிடைக்காததால் இளைஞர்கள் கட்சிக்கு வருவதில்லை.
என்ன இப்படி கொந்தளிக்கிறாரு... இவரை போன்றவர்களுக்கு அந்த கட்சியில், இதயத்தில் தாராளமா இடம் கொடுத்திருப்பாங்களே!

